சென்னை அடுத்துள்ள பள்ளிகாரணையில் வசித்து வருபவர் 32வயதான தமிழ்வாணன். சேலத்தைப் பூர்வீகமாக கொண்டவர், நீண்ட நாட்களாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த திருமண புரோக்கர் மகேஷ் என்பவர் மூலம் தமிழ்வாணனுக்கு விருதுநகரில் உள்ள பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 14ம் தேதி அப்பெண்ணைப் பார்ப்பதற்காக விருதுநகர் முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருக்கிறார், அங்கு வைத்துத்தான் இருவரும் முதன்முதலாகச் சந்தித்து கொண்டனர். பெயர் பூஜா. 36 வயதை கடந்த பெண். பார்த்ததும் பிடித்துவிட்டதாக தமிழ்வாணன் சொல்ல, பூஜாவும் அதற்கு பச்சை கொடி காட்டியிருக்கிறார். பிறகு என்ன அடுத்த கட்ட வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான் என புரோக்கர் அடியெடுத்து வைக்க, பெண்ணை புக் செய்ய, 2 லட்சம் ரூபாய் கேட்டு பேரம் பேசியிருக்கிறார். எதற்கு பணம் கேட்கிறார் ? என்று சிறிதும் யோசிக்காத தமிழ்வாணனின் குடும்பத்தினர், அப்படி இப்படி என கடைசியாக 1.5 லட்சத்திற்கு பேரம் பேசி முடித்துள்ளனர்.
அதன்படி தாங்கள் வைத்திருந்த 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை அங்கேயே கொடுத்துள்ளனர். மாறாக அன்று மாலையே மாப்பிள்ளைக்கு திருமணம் முடித்தாக வேண்டும் என்று கூற பெண் வீட்டாரும் உடனே ஒப்புக் கொண்டனர். அதன்படி அன்று மாலை 7 மணிக்கு அதே முருகன் கோயிலில் திருமணம் முடிந்தது. உறவினர்கள் யாருமின்றி திடீரென திருமணம் நடைபெற்றதால் கையோடு மனைவியுடன் புறப்பட்ட தமிழ்வாணன், அங்கிருந்து சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை விடிந்ததும் ஊர்க்காரர்களிடம் மனைவி பூஜாவை அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் அன்று இரவே புறப்பட்டு சென்னை பள்ளிகரணையில் உள்ள அவரது வீட்டிற்கு மனைவியுடம் வந்துள்ளார்.
இதனையடுத்து துணிக்கடைக்குச் சென்று மனைவிக்கு ஆசை ஆசையாக 10 ஆயிரம் ரூபாய்க்கு புது புடைவைகளை எடுத்து கொடுத்திருக்கிறார். மேலும், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க பிரபல கடைக்கு சென்றவர்கள் அனைத்தையும் வாங்கி கொண்டு எஸ்கலேட்டரில் கீழிறங்க முயன்றனர். அப்போது தனக்கு எஸ்கலேட்டர் என்றால் பயம் என்றும்; அதனால் நீங்கள் மட்டும் போங்கள் நான் படிக்கட்டில் கீழிறங்கி வருகிறேன் என்றும் பூஜா சொல்லியிருக்கிறார். பிறகும் கீழே வந்த தமிழ்வாணன் மனைவி பூஜாவிற்காக காத்திருக்க , எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது செல்போனை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்பொழுது பூஜா தன்னுடைய வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழ்வாணன் திருமணமான மூன்றாவது நாளில் தனியாக வீட்டிற்கு செல்வது நியாயமா என்று கேட்டதற்கு செல்போனை துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பதட்டத்தில் வீட்டிற்கு சென்று பார்க்கையில், வீட்டிலிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணமும் ; பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது.
பெண்ணின் பெற்றோரும் ; புரோக்கர்களும் தொடர்பில் சிக்கவில்லை. ஒருவழியாக தமிழ்வாணனுக்கு எல்லாம் புரிந்தது. கல்யாணம் என்ற வலையில் சிக்கி நகைகளையும் பணத்தையும் பறிகொடுத்தது தெரிந்தது.
இதனையடுத்து , 10 சவரன் தங்க நகையை திருடிக்கொண்டு தலைமறைவாக உள்ள பூஜாவை கண்டுபிடித்துத் திருடுபோன தங்க நகையை மீட்டு தர வேண்டும் என போலீசில் புகார் அளித்திருக்கிறார். மேலும், இதுகுறித்து விருதுநகரில் உள்ள சூளக்கரை காவல் நிலையத்தில் மே மாதம் 17ம் தேதி பூஜா மீதும் திருமண புரோக்கர்கள் மீது தமிழ்வாணன் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தமிழ்வாணன் கூறுகையில் திருமணத்திற்கு 1.5 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசிய நிலையில் கையிலிருந்த 1லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை அப்பொழுதே கொடுத்துவிட்டதாகவும் மீதமுள்ள 15 ஆயிரத்தை கொடுக்கவில்லை என்றால் முதலிரவு நடக்க விடமாட்டோம் என புரோக்கர்கள் தமிழ்வாணனை மிரட்டியதாகவும் கூறினார். மேலும் முதலிரவு அன்று அறைக்குள் சென்ற தமிழ்வாணனிடம் மனைவி பூஜா மதுபாட்டில் கேட்டதாகவும் ; அதற்கு அவர் இதெல்லாம் தவறு, திருமணத்திற்கு முன்பு நீ எப்படி இருந்தாய் என தெரியாது, இனிமேல் இதுபோன்ற கெட்ட பழக்கத்தை விட்டு விடு என்று கூறியதாகவும் தெரிவித்தார். இறுதியாக மாதவிடாய் நாள் என்று கூறி முதல் இரவையும் தள்ளிப் போட்டிருக்கிறார், பூஜா.
மேலும் படிக்க | "SC கையில ஸ்கூல் போக போகுது" பள்ளியில் ஜாதி வெறியை வளர்க்கும் டீச்சர்!
திருமணம் என்ற பெயரில் தமிழகம் முழுக்க பணம் மோசடியில் ஈடுபடும் இதுபோன்ற கும்பல் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இவர்கள் அனைவரும் காவல்துறையின் பிடியில் சிக்க வேண்டும் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே ஏமாற்றப்பட்டவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
மேலும் படிக்க | பாஜகவில் பதவி பெற பல லட்ச ரூபாய் பேரம்: குமுறும் பெண் நிர்வாகி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR