தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்; கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த 2014 தொடக்கத்தில், சிங்கப்பூருக்கு சென்று மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் 2014-ஆம் ஆண்உட ஜூலையில் மீண்டும் சிங்கப்பூர் சென்றார்.
சிங்கப்பூரிலும், சென்னையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்கா சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை பெற்றார்.
இரண்டாம் கட்ட மருத்துவ சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா சென்றார். சுமார் இரண்டு மாதங்களாக அமெரிக்காவிலேயே தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து, சிகிச்சை முடிந்தது இன்று காலை சென்னை திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதையடுத்து, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. விஜயகாந்த் நலமாக இருக்கிறார். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. வேறு எந்தக்கட்சியும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. தற்போது தான் விஜயகாந்த் சென்னை திரும்பியுள்ளார். விரைவில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தின் பெரிய கட்சிகள் எல்லாமே கூட்டணி குறித்து பேசி வருகின்றன. வர இருப்பது நாடாளுமன்ற தேர்தல். இந்தியாவுக்கான தேர்தல். எனவே விஜயகாந்த் என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு விரைவில் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்தார்.