கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அர்பன் நக்சலான ஆனந்த் டெல்டும்டே ஏன் கலந்து கொள்ள வேண்டும் எனவும், தமிழகத்தில் நக்சல் அரசியல் ஊடுருவலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மணிப்பூர் கலவரம் குறித்து பேசும்போது அதற்கு காரணமான அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும் எனவும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் வடகிழக்கு மாநிலங்களில் மக்களுக்கு எதிரான சிறப்பு ஆயுத சட்டங்கள் பெருமளவு நீக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | அகம்பாவம், ஆணவம் இல்லை! திமுகவிற்கு ஆதரவாக பேசிய டிடிவி தினகரன்!
செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, தமிழகத்தின் பாரம்பரிய ஊடக நிறுவனமான விகடன் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர் ஒரு புதிய கட்சியை துவங்கியுள்ளார் எனவே அவர் கலந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அர்பன் நக்சலான அம்பேத்கரின் பேத்தியை மணந்த ஆனந்த் டெல்டும்டே இந்நிகழ்வில் கலந்து கொண்டது தமிழகத்தில் நக்சல் அரசியலை கொண்டு வருவதற்கான செயல் எனவும், இதனை விகடன் நிறுவனம் செய்திருக்கக் கூடாது எனவும் கூறினார்.
மேலும், லாட்டரி அதிபரின் மகனான விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவை மன்னர் ஆட்சி என விமர்சிக்கிறார், ஆனால் அவரது மாமனார் தான் தேர்தல் பத்திரங்களின் மூலம் திமுகவிற்கு 581 கோடியை வழங்கி உள்ளார் எனவும், ஆதவ் அர்ஜுனா சபரீசனுக்கும் மிக நெருக்கமாக இருந்து கடந்த தேர்தலில் பணியாற்றியவர் எனவும் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், லாட்டரி அதிபரின் மருமகன் கையில் தான் உள்ளது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுவதாகவும், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க திருமா தயாராக இல்லை எனவும் அண்ணாமலை விமர்சித்தார். மேலும், திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் யுத்தியாக திமுகவே இதை செய்வதாக கருதுவதாகவும், அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார், அவர் உட்பட எந்த அரசியல்வாதிகள் மணிப்பூர் செல்ல நினைத்தாலும் அவர்களோடு சென்று அங்குள்ள நிலையை விளக்க நான் தயாராக உள்ளேன் என கூறிய அண்ணாமலை, விஜய் மணிப்பூர் விவகாரம் குறித்த அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், அங்குள்ள பழங்குடியினர் பிரச்சனைகள், மியான்மர் நாட்டிலிருந்து ஊடுருவல், போதை கலாச்சாரம் ஆகியவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், காங்கிரஸ் ஆட்சியின் போது சிறப்பு ஆயுதச் சட்டத்தை ரத்து செய்யக் கூறி பெண்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்திய மோசமான சூழல் இருந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அசாம், மணிப்பூர், அருணாச்சல் பிரதேஷ், நாகாலாந்து ஆகிய பகுதிகளில் பெருமளவு சிறப்பு ஆயுத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், மணிப்பூரில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் போதைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை விட பாஜக ஆட்சியில் தான் அதிக அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், எந்த விதத்திலும் துப்பாக்கிச் சூடு இதற்கு தீர்வு இல்லை என பாஜக நினைப்பதாகவும், ஆக்கபூர்வமான ஜனநாயக முறையில் மணிப்பூர் விவகாரத்தில் பேசி தீர்வு காணப்படும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார், அவர் விசிகவில் பொறுப்புக்கு வந்த போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டவர் எனவும், அப்போது திமுக மன்னர் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது யார் எனவும், திமுக குடும்ப ஆட்சி செய்து வருவதாகவும், விசிக இருக்கும் கூட்டணி குறித்து அக்கட்சி நிர்வாகி விமர்சித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி வைத்த காவல் துறையினர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாளை தமிழக டிஜிபியை சந்தித்து பாஜக சார்பில் மனு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கேரளாவிற்கு வைக்கம் போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் விவசாயிகளின் பிரதான பிரச்சனையாக உள்ள முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்தும், கேரளா அரசு தமிழகத்தின் உரிமையை மறுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் எனவும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ