'தோனிக்கு எப்போதும் நன்றி உள்ளனவாக இருப்பேன்...' காரணத்தை கூறிய அஸ்வின்

TNCA Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த ரவிசந்திரன் அஸ்வினுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் 1 கோடி ரூபாய் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 16, 2024, 09:00 PM IST
  • தோனிக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிப்பேன் - அஸ்வின்
  • அஸ்வின் டெஸ்டில் 500ஆவது விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
  • சமீபத்தில் அவரின் 100ஆவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடியிருந்தார்.
'தோனிக்கு எப்போதும் நன்றி உள்ளனவாக இருப்பேன்...' காரணத்தை கூறிய அஸ்வின் title=

Tamil Nadu Cricket Association, Ravichandran Ashwin: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கிய இந்த தொடர் மார்ச் மாதம் இரண்டாவம் வாரம் வரை நடைபெற்றது. இதில், பாஸ்பால் என்ற அதிரடி பாணியை கைக்கொண்ட இங்கிலாந்து அணியை, 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி கோப்பையையும் கைப்பற்றியது. 

இந்த தொடரில் இந்திய அணி பல்வேறு சாதனைகள் செய்தது. அதிலும் விராட் கோலி, புஜாரா, ரஹானே போன்ற சீனியர் பேட்டர்கள் இல்லாத நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரேல் என இளம் டெஸ்ட் வீரர்கள் சிறப்பாக விளையாடி சீனியர்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்தனர். என்னதான், நடந்த முடிந்த இந்தியா - இங்கிலாந்து தொடர் இளம் வீரர்களின் தொடராக இருந்தாலும் அனுபவ வீரரான ரவிசந்திரன் அஸ்வினுக்கு நிச்சயம் மறக்கவே முடியாத தொடராக அமைந்தது என்பதையும் மறுக்க முடியாது.

அஸ்வினின் எக்கச்சக்க சாதனைகள்

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஸ்வின் பல சாதனைகளை படைத்தார். குறிப்பாக அவரின் 500ஆவது டெஸ்ட் விக்கெட்டை சொல்லலாம். அதேபோல், 14ஆவது இந்திய வீரராக 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் விளையாடியிருந்தார். அதிலும் தமிழக வீரர்களில் 100 சர்வதேச டெஸ்ட் போட்டிகளை விளையாடிய முதல் வீரரும் அஸ்வின்தான். 

மேலும் படிக்க | IPL 2024: இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் இல்லை! மீண்டும் துபாய் செல்லும் பிசிசிஐ!

இவை மட்டுமின்றி 100ஆவது டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டை ஹாலை எடுத்ததன் மூலம், 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் அறிமுகப்போட்டியிலும், 100ஆவது போட்டியிலும் 5 விக்கெட் ஹாலை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். மேலும், இந்திய வீரர்களில் அதிக 5 விக்கெட் ஹாலை எடுத்தவர் என்ற பட்டியலிலும் தற்போது முதலிடம் பெற்றுள்ளார், சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். இந்த தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி இரு அணிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளரும் அஸ்வின்தான். 

ரூ.1 கோடியும், 500 தங்கக் காசுகளும்

இப்படி எக்கச்சக்க சாதனைகளை அள்ளிக் குவித்த அஸ்வினை கொண்டாடி தீர்க்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 500ஆவது விக்கெட்டை வீழ்த்தியதற்கும், 100ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடியதற்கும் ரவிசந்திரன் அஸ்வினை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் டெஸ்டில் 500ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்ததை கௌரவிக்கும் வகையில் 1 கோடி ரூபாயை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) வழங்கியுள்ளது. இதன் காசோலையை முன்னாள் ஐசிசி தலைவர் ஸ்ரீனிவாசன் அஸ்வினிடம் வழங்கினார். அஸ்வினுக்கு மூத்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்பளே 500 தங்கக் காசுகளை வழங்கினார். அஸ்வினுக்கு செங்கோல் வழங்கியும் TNCA கௌரவித்தது. மேலும், அஸ்வினை பாராட்டி பல்வேறு வீரர்கள் பேசிய வீடியோக்களும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. 

'தோனிக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிப்பேன்'

அப்போது அஸ்வின் பேசிய உரையின் ஒரு பகுதியில் அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான தோனிக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதில்,"2011ஆம் ஆண்டில் ஆர்சிபிக்கு எதிரான இறுதிப்போட்டியில், கிறிஸ் கெயிலுக்கு பந்துவீச என்னிடம் தோனி புதிய கொடுத்த சம்பவத்திற்கு எனது வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிப்பேன்" என பேசி உள்ளார். 

மேலும் படிக்க | IPL 2024: தோனியின் மாஸ்டர் பிளான்! சென்னை அணியில் உள்ள டாப் 5 பவுலர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News