இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!!
இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டம் லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெற்றது. இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி அந்த அணியின் கருணா ரத்னே, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இலங்கை அணிக்கு தொடக்கத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கருணா ரத்னே 1 ரன்னிலும், குசால் பெரேரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவிஷ்கா பார்னாண்டோ, குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பெர்னாண்டே 49 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 46 ரன்னிலும் ஆட்டமிழந்து அரைசதத்தை தவற விட்டனர்.
அடுத்து வந்த முன்னாள் கேப்டன் மேத்யூஸ் கடைசி வரை நின்று 85 ரன்கள் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் இலங்கையால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களே அடிக்க முடிந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஆர்சர் ஜாப்ரா, மார்க் வுட் தலா மூன்று விக்கெட்டுக்களும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஒவரிலேயே தொடக்க வீரர் பிரிட்டோ, மலிங்காவின் பந்து வீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இலங்கை தரப்பில் மலிங்கா 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.