அரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் ஷாஹாபாத் மார்க்கண்டா என்ற குக்கிராமத்தில் வறிய குடும்பத்தில் பிறந்த ராணி ராம்பால், "உடைந்த ஹாக்கி ஸ்டிக்கில்" பயிற்சி செய்யத் தொடங்கினார். ஆனால் தனது 15வது வயதிலேயே இந்திய அணியில் இடம்பெற்றார். 2010 உலகக் கோப்பைக்கான தேசிய அணியின் இளம் வீராங்கனை என்ற பெயர் பெற்றார் ராணி அவரது கனவும் ஏக்கமும் எப்படி நனவானது தெரியுமா?
”இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்காதா என ஏங்கினேன். மின் தடைகளிலிருந்து, தூங்கும்போது காதைச் சுற்றி ரீங்காரமிடும் கொசுக்களிடமிருந்து, இரண்டு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லை என்ற நிலையில் இருந்து, மழை பெய்யும்போதெல்லாம் நீரில் மிதக்கும் வீட்டிலிருந்து விடுதலை பெற விரும்பினேன். அப்பா வண்டி இழுக்கும் கூலித்தொழிலாளி. அம்மா வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்” என்று தனது சிறுவயதின் சின்னச் சின்ன ஆசைகளை பட்டியலிடுகிறார் ராணி.
ராணியின் வீட்டுக்கு அருகிலேயே இருந்த ஹாக்கி அகடமியில் பயிற்சி செய்பவர்களை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை ராணிக்கு ஹாக்கி விளையாட ஆசை எழுந்தது. ஆனால், தினக்கூலி 80 ரூபாய் வாங்கும் அப்பாவிடம் மகளுக்கு ஹாக்கி மட்டை வாங்கும் அளவுக்கு வசதியில்லை. விளையாட கற்றுக் கொடுங்கள் என ஹாக்கி பயிற்சியாளரிடம் கேட்டால், உடல் பலவீனமாக, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் ராணிக்கு பயிற்சிகளைத் தாங்கும் அளவுக்கு வலிமை இல்லை என மறுத்துவிடுவார்.
Also Read | Tokyo Olympics: இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது
மைதானத்தில் கிடைத்த ஹாக்கி மட்டையை வைத்துக் கொண்டு ’ஏகலைவனாக’ பயிற்சி செய்ய ஆரம்பித்த ராணியின் உத்வேகத்தைப் பார்த்த பயிற்சியாளர் ராணியின் திறமையை பார்த்து பயிற்சி கொடுக்க ஒத்துக் கொண்டார். ஆனால் அடுத்து வீட்டில் எழுந்தது தடை. ஸ்கர்ட் போட்டுக்கொண்டு விளையாடுவதை எல்லாம் அனுமதிக்க முடியாது என்ற குடும்பத்தினரை கெஞ்சி கூத்தாடி ஒத்துக் கொள்ள வைத்தார்.
கடிகாரம்கூட வீட்டில் இல்லை என்பதால், அதிகாலையில் பயிற்சிக்கு விழிப்பதற்காக ராணியின் தாய் விழித்துக்கொண்டே இருந்து, வானத்தைப் பார்த்து விடியலை அறிந்து மகளை எழுப்புவார்.
பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு ஆட்டக்காரரும் அரை லிட்டர் பால் கொண்டு வர வேண்டும் என்பது அகாடமியின் விதி. அது உடலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கும் என்பதால் அந்த விதிமுறை அமலில் இருந்தது. ஆனால் ராணியின் வீட்டில் 200 மிலி பால் தான் ஏற்பாடு செய்ய முடிந்தது, எனவே அதில் தண்ணீர் கலந்து 500 மி.லியக கொண்டு குடிப்பாராம் ராணி.
Also Read | Tokyo Olympics: வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி
அவ்வளவு வறுமையான சூழ்நிலையில் இருந்த ராணி தனது விளையாட்டு திறமையாலும், விடா முயற்சியாலும், ‘ஏகலைவனாக’ தனது விளையாட்டு பயணத்தைத் தொடங்கிய ராணி ராம்பால் 2016-இல் ’அர்ஜுனா’ விருதை பெற்றார்.
36 வருடங்கள் கழித்து, 2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்குச் சென்றது இந்திய பெண்கள் அணி. அப்போது ராணிக்கு ஹரியானா மாநிலம் அளித்த பரிசுத் தொகையை வைத்து பெற்றோருக்கு வீடு கட்டி கொடுத்தார் ராணி.
ராணிக்கு சிரமம் ஏற்பட்டபோதெல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அவரது முதல் பயிற்சியாளர் சர்தால் பல்தேவ். முதலில் ராணியை போதிய ஊட்டச்சத்து இல்லை என தன்னுடைய மாணவியாக சேர்க்க மறுத்த அவர், பிறகு ராணியின் ஆர்வத்தைக் கண்டு பயிற்சியளித்தார். இப்போதும் தனது முதல் பயிற்சியாளரை மறக்காத ராணி "அவர் எனக்கு கடவுளைப் போன்றவர்" என்றே கூறுகிறார்.
”என் பயிற்சியாளர் ஹாக்கி கிட்களும் ஷூக்களும் வாங்கிக் கொடுப்பார். தன் குடும்பத்திலேயே என்னையும் தங்க வைத்து, எனக்குத் தேவையான உணவு கிடைக்கச் செய்தார், அவர் எனக்கு கடவுளைப் போன்றவர்” என்கிறார் ராணி.
விளையாட்டு போட்டியில் கலந்துக் கொண்ட ராணிக்கு கிடைத்த முதல் ஊதியம் 500 ரூபாய். ராணியின் குடும்பமே முதன்முதலில் அவ்வளவுப் பெரிய தொகையை அப்போது தான் பார்த்திருக்கிறார்கள். மாநில அணியில் இடம் பெற்றும், பல போட்டிகளில் பங்கேற்ற பிறகும், 15 வயதில் தேசியக் கோப்பை வென்ற பிறகும் கூட, எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்பது தான் ராணியின் உறவினர்களிடம் இருந்த ஒற்றை கேள்வி. ஆனால், “உனக்கு ஆசை தீரும்வரை விளையாடு” என்று குடும்பத்தினர் ஒத்துழைப்பும் கிடைத்த பிறகு தான் ராணிக்கு நிம்மதியானது. .
எனக்கு இதுவே முடிவு அல்ல. என் பெற்றோருக்கும் பயிற்சியாளருக்கும் நன்றிக்கடனாக அவர்கள் எப்போதும் கனவு கண்டு வரும் ஒன்றைத் தருவதில் உறுதியாக இருக்கிறேன் – டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கம் பெறுவதுதான் அது என்று சொல்கிறார் ராணி ராம்பால். பல பெண்களுக்கு உதாரணமாக வாழும் உதாரணமாக திகழும் ராணி ராம்பாலுக்கு வாழ்த்துக்கள்…
Also Read | Tokyo Olympics: பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR