தொடரை வென்றது இந்தியா... சூர்யகுமார், விராட் கோலி வெறியாட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 25, 2022, 10:47 PM IST
  • விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
  • ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடித்து போட்டியை முடித்துவைத்தார்.
  • 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.
தொடரை வென்றது இந்தியா... சூர்யகுமார், விராட் கோலி வெறியாட்டம்  title=

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்றது. போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த்-க்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 54 ரன்களையும், கேம்ரூன் க்ரீன் 52 ரன்களையும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சு தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், சஹால், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

மேலும் படிக்க | அவுட்டாகி வெளியேறும் ஸ்மித்... மைதானத்தில் அரபிக் குத்து - ட்விட்டரில் டிரெண்டிங்

187 ரன்கள் என்ற கடின இலக்குடன் இந்தியா களமிறங்கிய நிலையில், முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் கேஎல் ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா பவுண்டரிகளை அடித்து ரன்களை குவித்தார். இருப்பினும், கம்மின்ஸ் வீசிய நான்காவது ஓவரில் ரோஹித் சர்மா 17 (14) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து, பவர்பிளே முடிவில் இந்திய அணி, 2 விக்கெட்டுகளை இழந்தது 50 ரன்களை எடுத்தது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி தனது பேட்டிங் பவர்பிளேயில் 66/2 என்ற நிலையில் இருந்தது நினைவுக்கூரத்தக்கது.

ரோஹித் விக்கெட்டிற்கு பிறகு, ஜோடி சேர்ந்த விராட் - சூர்யகுமார் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிதறடித்தனர். ஒருபுறம் விராட் பொறுமை காட்ட, மறுபுறம் சூர்யகுமார் அதிரடி காட்டினார். அவர் 29 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 

அரைசதம் அடித்த அடுத்த ஓவரில் சூர்யகுமார் 69 (36) ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 5 பவுண்டரிகளையும், 5 சிக்ஸர்களையும் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விராட் - சூர்யகுமார் ஜோடி, 104 ரன்களை குவித்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தது. பின்னர், ஹர்திக் பாண்டியா களம் புகுந்தார். தொடர்ந்து, விராட் கோலி தனது 37ஆவது பந்தில் அரைசதம் அடித்தார். இது, அவரது 33ஆவது சர்வதேச டி20 அரைசதமாகும்.  

Virat Kohli

இருவரும் தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தை விளையாடினர். எனவே, கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட்டது. ஹேசில்வுட் வீசிய 19ஆவது ஓவரில் பாண்டியா அடித்த ஒரு சிக்ஸர் உள்பட மொத்தம் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து, 11 ரன்கள் தேவைப்பட்ட கடைசி ஓவரை டேனியல் சாம்ஸ் வீசினார். 

Virat Kohli

முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி மிரட்டிய விராட் கோலி, அடுத்த பந்தில் கேப்டன் பின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 43 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். தொடர்ந்து, தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அவருக்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.  தினேஷ் கார்த்திக் 3ஆவது பந்தில் சிங்கிள் எடுக்க,  4ஆவது பந்தில் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்கவில்லை. 5ஆவது பந்தில் பவுண்டரி அடித்து ஹர்திக் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். இதன்மூலம், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி, டி20 தொடரை வென்றது. 

மேலும் படிக்க | ரிஷப் பந்தின் சகோதரியா இவர்... பிறந்தநாள் புகைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News