வரும் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வதையொட்டி, சென்னை பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் நிகழவிருக்கும் சூரிய கிரகணம் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் சூரியன், சந்திரன், கேது, குரு, சனி, புதன் முதலான ஆறு கிரகங்களின் சேர்க்கை நடக்கவிருக்கிறது. தென் தமிழகத்தில் 23 வருடங்களுக்கு பிறகு நெருப்பு வளையம் போன்று தோன்றும் முழு சூரிய கிரகணம் தெரியவுள்ளது.
நெருப்பு வளைய சூரிய கிரகணமானது கேரளாவில் தொடங்கி தமிழகத்தின் 10 மாவட்டங்களில் முழுமையாக பார்க்க முடியும். மற்ற பகுதிகளில் பகுதி சூரிய கிரணகன காட்சியை காணலாம்.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியன் மறைக்கப்படும். அதாவது நிலவின் நிழல், பூமியின் மீது விழும். இது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது. இந்த சூரிய கிரகணமானது காலை 8:00 மணி முதல் 11:16 மணி வரை 97.3 சதவீதம் முழுமையாக சூரியனை மறைக்கிறது.
இந்த சூரிய கிரகணத்தை குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் பார்க்க முடியும். மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
எனவே பொதுமக்கள் பார்ப்பதற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிவியல் பலகையின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் கூறியதாவது:-
சூரியனை நிலவு மறைக்கும் அற்புத காட்சிதான் சூரிய கிரகணம். நிலவால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. எனவே சுற்றி இருக்கும் பகுதி நெருப்பு வளையம் போல் தெரியும். இந்த நிகழ்வின்போது வெளியே வரக்கூடாது என்பதல்ல. பார்த்து ரசிக்கலாம். ஆனால் வெறும் கண்னால் பார்க்கக்கூடாது. ‘மைலார்’ கண்ணாடி மூலம் பார்க்க வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கம், மாவட்ட அறிவியல் தொழில்நுட்ப மையங்கள், விஞ்ஞான்பிரசார் உள்ளிட்ட அறிவியல் அமைப்புகள் செய்து வருகின்றன. சென்னையில் பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். அறிவியல் மையங்களில் டெலஸ்கோப் வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் சூரிய கிரகணம் நிழலை பார்க்க முடியும்.