ஆசிரியர் தினத்தை கூகுள் நிறுவனம் தனது டூடுலில் வைத்து கௌரவித்துள்ளது...!
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி 1888 ஆம் ஆண்டு திருத்தணியில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி, தாயார் பெயர் சீதம்மா. இவர் சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும், இவரை சிறந்த தத்துவஞானி என்றும் கூறலாம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிகள் அனைவருக்கும் தெரியும். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். நமக்கு அகரத்தை சொல்லித் தந்து ஆக்கத்தை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றியும் அன்பும் செலுத்தும் நாள் இந்த நாள்...
குடும்பத்தை விட்டு ஒரு குழந்தை வெளியே சென்று சந்திப்பது முதலில் ஆசிரியரைத்தான். அவர் கற்றுக் கொடுக்கும் பண்பும், கல்வியும்தான் அக்குழந்தையை வாழ்நாள் முழுவதும் நெறிப்படுத்துகிறது. ஆசிரியர்களால்தான் மாணவர்களுக்கு கற்க கசடற கற்பவை என்பது புரிய வருகிறது.
ஆசிரியர்களுக்கு ஊதியம் தரப்பட்டாலும் அவர்களின் சேவை, அந்த ஊதியத்தைவிட பன்மடங்கு உயர்ந்தது. தங்கள் பணிக்காலம் மூப்படையும் முன், பல ஆயிரம் மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்குகின்றனர். சுருங்கச் சொன்னால் தேசத்தின் எதிர்காலத்தையே உருவாக்குபவர்கள் அவர்கள்தான்.
அறிவாற்றலை அள்ளித் தந்து, தங்களைப் பண்படுத்திய ஆசிரியர்களை ஒவ்வொருவரும் இன்னாளில் நினைவுகூர்வது, அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடனாகும்.... இந்த சிறப்பான நாளை கௌரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் ஆசிரியர் தினத்தை டூடுலில் வைத்து கொண்டாடுகிறது..
ஜீ செய்தி இணைய பிரிவு சார்பாக அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்....!