12-ஆம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் இயற்கை விவசாயி நெல் ஜெயராமன்!!

பாரம்பரிய நெல் ரகங்களில் 174 வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் குறித்த தகவல்கள் 12-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது!!

Last Updated : May 29, 2019, 12:39 PM IST
12-ஆம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் இயற்கை விவசாயி நெல் ஜெயராமன்!! title=

பாரம்பரிய நெல் ரகங்களில் 174 வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் குறித்த தகவல்கள் 12-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது!!

அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வாரின் சீடரான இவர் சுமார் 174 அரிய நெல்வகைகளை மீட்டெடுத்த இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி பிறந்தார். சிறு வயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வமுள்ள ஜெயராமன், நமது பாரம்பரிய நெல் விதைகள் அழிந்து வருவதை கண்டு மனம் வருந்தி, அந்த நெல் வகைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

கடந்த 22 ஆண்டுகளில் அவர் 174 வகை பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்து அவற்றை மறு உற்பத்தி செய்து சாதனை புரிந்தார். அதுமட்டுமின்றி பாரம்பரிய நெல் விதைகளின் மகத்துவம் குறித்து சக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சுமார் 37 ஆயிரம் விவசாயிகளை பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு மாற்றினார். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாரம்பரிய நெல் விதைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். இவருடைய அறிவுரையால் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் பாரம்பரிய நெல் விதைகளின் உண்மையை புரிந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் நெல் திருவிழா என்ற விழாவை ஏற்பாடு செய்து அதில் இந்தியாவில் உள்ள முக்கிய விவசாயிகளை கலந்து கொள்ள செய்தார். பல மாநில, தேசிய விருதுகளை பெற்ற ஜெயராமன், தமிழக இயற்கை உழவர் இயக்கம், நமது நெல்லை காப்போம் ஆகிய அமைப்புகளை நடத்தி அதன்மூலம் நலிந்த விவசாயிகளுக்கு சேவை செய்து வந்தார். 

இந்நிலையில், இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார். நெல் ஜெயராமனின் குறிப்புக்கள் விவசாயிகள் மற்றும் மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்திருந்தது. புகழ்பெற்ற தாவரவியலாளர்களான நார்மன் இ.போர்லாக் மற்றும் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோரின் வரிசையில் புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. வாழ்நாளையே விவசாயத்துக்காக அர்ப்பணித்த நெல் ஜெயராமன் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் நிலையில், தற்போது 12-ம் வகுப்பு புத்தகத்தில் பாடமாக மாறியுள்ளார்.

 

Trending News