Special Category State: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கும் அரசாங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு கட்சியும் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறவில்லை. எனவே மற்ற மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நிலைக்கு பாஜகவும், காங்கிரஸ் கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளது. தற்போது ஜனதா தளமும், சந்திர பாபுவும் பாஜகவுடன் தங்களது ஆதரவு கரங்களை கொடுத்துள்ளனர். ஆனால் சில கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். இவற்றை நிறைவேற்றினால் மட்டுமே புதிய அரசாங்கத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர். அதில் தங்கள் கட்சி எம்பிக்கு முக்கிய அமைச்சர் பதவி முதல் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வரை பல அடங்கி உள்ளன.
சிறப்பு மாநில அந்தஸ்து என்றால் என்ன?
சிறப்பு மாநில அந்தஸ்தை பெற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேச கட்சி கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு மாநிலத்திற்கு இந்த சிறப்பு அந்தஸ்து எவ்வாறு வழங்கப்படுகிறது? மற்றும் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் அந்த குறிப்பிட்ட மாநிலத்திற்கு என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு மாநிலத்திற்கு சிறப்பு வகை அந்தஸ்து என்பது அதன் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பின்தங்கிய மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. ஒரு மாநிலம் புவியியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியிருந்தால், வரி விதிப்புகளில் சிறப்பு விலக்கு அளிக்க இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க அரசியலமைப்பில் எந்த இடமும் இல்லை என்றாலும், கடந்த 1969 ஆம் ஆண்டு 5வது நிதிக் குழுவின் பரிந்துரையின் காரணமாக பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன்படி 1969 ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து சிறப்பு அந்தஸ்து பெற்ற முதல் மாநிலங்கள் என்ற பெயரை பெற்றது. அதன்பிறகு, இமாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பொருளாதார மற்றும் நிதி அம்சங்களுடன் மட்டுமே தொடர்புடையது. இதனை ஒரு மாநிலத்திற்கு வழங்குவதற்கு சில நிபந்தனைகள் மற்றும் தேவைகள் உள்ளன. அந்த குறிப்பிட்ட மாநிலம் குறைந்த மக்கள்தொகையை கொண்டிருக்க வேண்டும் அல்லது அதிக பழங்குடி மக்கள் இருக்க வேண்டும் அல்லது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்க வேண்டும் அல்லது பொருளாதாரம், உள்கட்டமைப்பின் அடிப்படையில் பின்தங்கிய மாநிலமாக இருக்க வேண்டும்.
சிறப்பு அந்தஸ்தின் பயன்கள்!
ஒரு மாநிலம் சிறப்புப் பிரிவு அந்தஸ்து பெறும்போது, மத்திய அரசு அந்த மாநிலத்திற்கு 90 சதவீத நிதியை வளர்ச்சி திட்டங்களுக்காக வழங்குகிறது. அதுவே மற்ற மாநிலங்களுக்கு 60 சதவீதம் அல்லது 75 சதவீதம் மட்டுமே இருக்கும். மீதமுள்ள தொகையை மாநில அரசு தங்கள் கஜானாவில் இருந்து செலவு செய்ய வேண்டும். அந்த தொகை எப்போதும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக உதவும். அதே போல சுங்க வரி, வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி உள்ளிட்ட முக்கியமான வரிகளில் இருந்து குறிப்பிடத்தக்க சலுகைகளைப் பெற முடியும். முக்கியமாக மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டில் 30 சதவீதம் சிறப்பு வகை மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க | கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ