கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. தற்போது கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பா.ஜ.க ஆட்சியை பிடிக்கவும் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் மனுதாக்கல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா சாமுண்டேஷ்வரி தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து இன்று பாதாமி தொகுதியிலும் மனுதாக்கல் செய்ய இருக்கிறார். இதுவரை கர்நாடகாவில் 1,127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் பா.ஜ.க-178, காங்கிரஸ்-174, மதசார்பற்ற ஜனதா தளம்- 141, சுயேச்சை -451 ஆகும். வாக்கு எண்ணிக்கையானது மே 15-ம் தேதி நடைபெற இருக்கிறது.
மேலும், தேர்தல் நெருங்குவதையொட்டி, பறக்கும் படையினரும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று நடந்த சோதனையில் மட்டும் சுமார் ரூ.38 கோடி வரை கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.