கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்தது. புல்வாமாவில் ஏற்பட்ட கொடூரமான தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் எனவும் நாட்டு மக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் அந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து பதிலடி தாக்குதல் குறித்து முடிவெடுக்க ராணுவ வீரர்களுக்கு முழு அதிகாரத்தை பிரதமர் மோடி வழங்கினார்.
இந்தநிலையில், தாக்குதல் நடந்து ஐந்து நாட்கள் முடிந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது:
எந்தவித ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது இந்திய அரசு குற்றம் சாட்டுகிறது. இந்திய அரசு தகுந்த சாட்சியங்களை அளித்தால் தக்க நடவடிக்கையை மேற்கொள்வோம். புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன்?
வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாகிஸ்தான் மண்ணில் இருந்து யாரும் வன்முறையை பரப்புவது இல்லை. அப்படி யாராவது வன்முறையை தூண்டினார் என்ற ஆதாரத்தை இந்திய அரசு அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். போரினால் அல்ல. அதையும் மீறி இந்தியா எங்கள் மீது போர் தொடுக்க நினைத்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம்.
போரை தொடங்குவது எனபது மக்களின் கைகளில் தான் உள்ளது. போரினால் ஏற்படும் விளைவுகள் எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல பயங்கரவாத அமைப்புக்கள் செயல்பட்டு வருகிறது என்று இந்தியா பலமுறை ஆதரங்களை வழங்கியுள்ளது. ஆனாலும் அதுக்குறித்து பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.
ஆனால் கடந்த 12 நாட்களாக பதிலடி குறித்து ஆலோசனை மற்றும் அதற்கான செயல்பாடுகளை குறித்து நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வந்தது. சரியாக திட்டமிட்டு இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்ட வந்த முகாம்கள் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசி, அந்த முகாம்கள் அழித்தது. இந்த தாக்குதல் பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களையோ, பொதுமக்களையோ அல்ல.
தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அடுத்தகட்ட நடடிக்கை என்னவாக இருக்கும். ஏற்கனவே அவர், "பேச்சு வார்த்தை மூலம் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். போரினால் அல்ல. அதையும் மீறி இந்தியா எங்கள் மீது போர் தொடுக்க நினைத்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என கூறியிருந்தார்.