பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து வெளிப்படுத்திய அவதூறு கருத்து சமீப நாட்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சைத் தொடர்ந்து அவர் பாஜக-விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது கருத்துகளால் ஏற்பட்ட கொந்தளிப்பு நாட்டின் எல்லைகளைத் தாண்டியும் பிரதிபலித்தது.
இதை எதிர்த்து இந்தியா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தர பிரதேச அரசு, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு கையாண்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை பெரும் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் சட்டவிரோதமாக தடுப்புக்காவல், குடியிருப்புகளை புல்டோசர் கொண்டு இடித்தல், பாஜக செய்தித் தொடர்பாளர்களுக்கு ஆதரவாக காவல்துறையின் வன்முறை ஆகியவற்றை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் அவசர கடிதம் எழுதியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிற்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, வி. கோபால கவுடா, ஏ.கே. கங்குலி, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஏ பி ஷா, முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துரு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி முகமது அன்வர், உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், இந்திரா ஜெய்சிங், சந்தர் உதய் சிங், பிரசாந்த் பூஷன், ஆனந்த் குரோவர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், முகமது நபியைப் பற்றி உத்தரபிரதேசத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் போராட்டங்களை விளைவித்துள்ளதாகவும், போராட்டக்காரர்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு எதிராக மாநில அரசே வன்முறை நடவடிக்கை எடுக்க அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | உத்தரப்பிரதேச வன்முறை: இதுவரை 316 பேர் கைது; புல்டோசரால் குறி வைக்கப்படும் வீடுகள்!
குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டுமென்ற எண்ணம் யாருக்கும் வரகூடாது என முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியதாக கூறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளன.
மேலும் அவர் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் உத்தரபிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அரசின் இந்த கருத்துக்கள்தான் போராட்டக்காரர்களை மிருகத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் சித்ரவதை செய்ய காவல்துறைக்கு தைரியத்தை அளித்துள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, போலீஸ் காவலில் இருக்கும் இளைஞர்களை லத்தியால் தாக்குவது, போராட்டக்காரர்களின் வீடுகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்படுவது, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த போராட்டக்காரர்களை காவல்துறை விரட்டி அடிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி மனசாட்சியை உலுக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆளும் நிர்வாகத்தின் இத்தகைய மிருகத்தனமான அடக்குமுறையானது குடிமக்களின் உரிமைகளை மீறுவதாகும் என்றும், இது அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை கேலிக்கூத்தாக்குகிறது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் நீதித்துறையின் திறமை சோதிக்கப்படுவதாகவும், கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் மற்றும் பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் ஆகியவற்றில் தானாக முன்வந்து எடுத்த அதே உணர்விலும், அரசியலமைப்பின் பாதுகாவலர் என்ற பங்கிலும், உச்சநீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR