பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையில் ரூ. 3000 கோடி மதிப்பிலான எதிரி சொத்துகளின் பங்குகளை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத எதிரி சொத்து பங்குகளை விற்பனை செய்வதற்கு முடிவு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் செய்யப்பட்டது. இந்த சொத்துகளை விற்பனை செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளும் குழுவின் தலைவராக மத்திய நிதியமைச்சர் இருப்பார். அந்தக் குழுவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய எதிரி சொத்துகளை நிர்வகிக்கும் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 996 நிறுவனங்களில் 6,50,75,877 பங்குகள் உள்ளன. இவற்றில், 588 நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு சொந்தமான சொத்துகள், இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தன.அந்த சொத்துகளை, பாதுகாவலரின் கட்டுப்பாட்டில் நீடிக்கச் செய்யும் வகையில், 1968ம் ஆண்டில் எதிரிகள் சொத்து சட்டம் இயற்றப்பட்டது.தொடர்ந்து இச்சட்டத்தில் சில திருத்தங்களை செய்து அவசர சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
20,323 பேரின் இந்த பங்குகள் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. இந்நிலையில் ரூ.3000 கோடி மதிப்புள்ள இந்த பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.