சமாஜ்வாதி கட்சி பொறுப்பை மகன் அகிலேஷ் கைப்பற்றியதை அடுத்து, கட்சி பணிகளில் இருந்து முலாயம் சிங் ஒதுங்கி இருந்து வந்தார். இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி துவங்கப்பட்டதன் 25 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாநில மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டிற்கு முலாயம் சிங்கிற்கோ, அவரது சகோதரர் சிவ்பாலுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனையடுத்து லோக்தல் கட்சியை இணைத்து புதிய அரசியல் கட்சியை துவக்க முலாயம் முடிவு செய்து இருந்தார். இதற்கான அறிவிப்பை முலாயம் இன்று வெளியிட போவதாக முன்னதாக அறிவித்து இருந்தார்.
அந்த வகையில், லக்னோவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் முலாயம். அப்போது பேசிய அவர்:-
நான் தனி கட்சி எதையும் துவங்கப் போதில்லை. உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு முடிவுக்கு வந்து விட்டது. உ.பி., அரசால் விவசாயிகள் அவமதிக்கப்படுகிறார்கள்.
அரசால் போடப்பட்ட கிரிமினல் வழக்குகள் அனைத்தும் போலியானவை என நிரூபணமாகி உள்ளது. அரசு சொல்வதற்கும் செய்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. உ.பி.,யின் பல கிராமங்களில் இன்னும் மின்சார வசதி இல்லை.
அனைவருக்கும் இலவச மருத்துவம், கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இது மாநில வளர்ச்சிக்கு புதிய பாதை அமைப்பதாக இருக்கும்.
கடந்த 3 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுகிறது. உ.பி.,யில் பனராஸ் பல்கலையில்., பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
அகிலேசால் எடுக்கப்படம் முடிவுகள் எதிலும் எனக்கு உடன்பாடில்லை. அதனாலேயே கட்சி செயல்பாடுகளில் இருந்து விலகி இருக்கிறேன். மக்கள் அனைவரின் ஆசீர்வாதமும் சமாஜ்வாதிக்கு எப்போதும் இருக்க வேண்டும். அகிலேஷ் எனது மகன், அதனால் எனது ஆசிகள் என்றும் அவருடன் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.