ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370-வது பிரிவை நீக்கியதற்கு பின்னர் ஜம்மு-காஷ்மீரில் உயிர் இழப்புகள் ஏதும் நிகழவில்லை என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370-வது பிரிவை நீக்குவதற்கான முடிவை கேள்விக்குட்படுத்தியவர்கள் எதிரிகளுடன் இருந்ததாக மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா தேசிய தலைவருமான அமித் ஷா சாடியுள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவு அகற்றப்பட்டதில் இருந்து, எந்த தோட்டாவும் சுடப்படவில்லை, கல்லும் பறக்கவில்லை, யாரும் கொல்லப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், 'கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி ஒரு வரலாற்று முடிவை எடுத்தார். நீங்கள் மீண்டும் பிரதமர் மோடியை பிரதமராக்கினீர்கள், அவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் 370-வது பிரிவு மற்றும் 35A பிரிவு ஆகியவற்றை ரத்து செய்தார். மோடி ஜியைத் தவிர வேறு யாராலும் இந்த வேலையைச் செய்ய முடியவில்லை. 370 மற்றும் 35A பிரிவுகள் நாட்டின் ஒருங்கிணைப்புக்கு தடையாக இருப்பது, இந்த தடையை உடைத்து எறிந்தவர் மோடி என அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்., 370-வது பிரிவை அகற்றுவதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சிக்கான வழிகள் திறக்கப்பட்டுள்ளன, பயங்கரவாத சவப்பெட்டியில் கடைசி ஆணி போடப்பட்டுள்ளது, ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முடிவில் அனைவரும் அரசாங்கத்துடன் இருக்கிறார்கள், ஆனால் சிலர் அதை எதிர்க்கின்றனர் எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.