9ஆவது முறையாக... இன்று மீண்டும் முதல்வராகும் நிதீஷ் குமார்... பீகாரில் நடப்பது என்ன?

Nitish Kumar BJP Alliance: நிதீஷ் குமார் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அதில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 28, 2024, 08:19 AM IST
  • சுஷில் மோடியை துணை முதல்வராக்க நிதீஷ் பரிந்துரை என தகவல்.
  • இன்று தனது கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களையும் நிதீஷ் குமார் சந்திக்க உள்ளார்.
  • இது தேசிய அளவிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
9ஆவது முறையாக... இன்று மீண்டும் முதல்வராகும் நிதீஷ் குமார்... பீகாரில் நடப்பது என்ன? title=

Nitish Kumar BJP Alliance: இன்னும் கூடிய விரைவில் மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன. வரும் பிப்.1ஆம் தேதி மத்திய அரசின் சார்பில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும். 

அந்த வகையில், மக்களவை தேர்தலில் வலுவாக காணப்படும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பெயர் INDIA.இந்த கூட்டணி வலுவானதாக மாறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.

தேசிய அளவில் நிலவும் குழப்பம்

மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடுவதாகவும், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் தனித்து போட்டியிடுவதாகவும் அறிவித்திருந்தது. இருப்பினும், இரு கட்சிகளும் INDIA கூட்டணியில் தொடர்வதாக கூறப்பட்ட நிலையில், பீகாரில் காங்கிரஸ் உடன் இணக்கம் காட்டி வந்த நிதீஷ் குமார் தற்போது பாஜகவுடன் மீண்டும் கைக்கோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், பீகார் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | INDIA Alliance.. நிதிஷ் குமார்... மம்தா... கேஜ்ரிவால்... அதிகரிக்கும் சவால்கள்!

அந்த வகையில், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், முதலமைச்சருமான நிதீஷ் குமார் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் பாஜக ஆதாரவில் 9ஆவது முறையாக முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. பாஜகவுடன் ஏற்கெனவே இரண்டு முறை கூட்டணியை முறித்துக்கொண்ட நிதீஷ் குமார், தற்போது ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூடிய தனது உறவை முறித்து பாஜகவுடன் மீண்டும் கைக்கோர்க்கிறார்.

என்ன செய்யப்போகிறார் நிதீஷ் குமார்?

பீகார் ஆளுநரை இன்று காலை சந்திக்க அம்மாநில முதல்வரான நிதீஷ் குமார் நேரம் கேட்டுள்ளார். நிதீஷ் குமார் இன்று தனது கட்சிகளின் எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளார். அதன் பிறகு, அவர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறலாம் என்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பாஜகவும், நிதீஷ் குமாருக்கு தனது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு சுதந்திரம் அளித்ததாக கூறப்படும் நிலையில், முதல்வர் நீதிஷ் குமார் துணை முதல்வர் பதவிக்கு சுஷில் மோடியின் பெயரை முன்மொழிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. சுஷில் மோடி மூன்று முறை துணை முதல்வராக இருந்தவர். துணை முதல்வர் பதவிக்கான போட்டியில் ரேணு தேவி மற்றும் தர்கிஷோர் பிரசாத் ஆகியோரும் உள்ளனர். பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து தலா 3 அமைச்சர்களும், ஜிதன் ராம் மஞ்சியின் கட்சியில் இருந்து ஒருவரும் இன்று பதவியேற்பார்கள் என்பதும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன.

மேலும் படிக்க | ராமருக்கு பின் சிவன் தனது இடத்திற்கு திரும்புவாரா? வாரணாசி ஞானவாபி அறிவியல் ஆய்வறிக்கை

பாஜகவும், நிதீஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளமும் வர இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக சமீபத்தில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. பீகாரில் உள்ள அனைத்து பாஜக எம்எல்ஏக்களும் நிதீஷ்குமாருக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாகூட்டணிக்கு முற்றுப்புள்ளி

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி மகாகத்பந்தன் அல்லது மகா கூட்டணியில் சேர்ந்தது. இந்தியா கூட்டணி உருவாக்கத்திலும் நிதீஷ் குமார் அதிக ஆர்வங்காட்டினார். இந்நிலையில், நிதீஷ் குமாரின் தற்போதைய நடவடிக்கைகளை பார்க்கும்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உடனான கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதில் சமரசப் புள்ளியைத் தாண்டி நீதிஷ் குமார் வெகுதூரம் சென்றுவிட்டார் என்பதே காட்சிகள் உணர்த்துகின்றன.

தேசிய அரசியல் நோக்கி நிதீஷ் குமார்

2025ஆம் ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிதீஷ் குமார் தேசிய அரசியலில் களமிறங்கி, மத்திய அரசின் முக்கியப் பொறுப்பை ஏற்பார் என்றும், இதனால் அவர் முதலமைச்சர் பதவியை அடுத்தாண்டு துறக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உதிரி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இனிமேல் தான் ஆட்டமே இருக்கு என்ற வகையில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் அவர்களின் கட்சி தலைவர்களிடம் பேசியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக பிரதமர் மோடி செயல்படுகிறார் -காங்கிரஸ் தலைவர் கார்கே
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News