நேஷனல் ஹெரால்டு' வழக்கில் ராகுல், சோனியாவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் டிசம்பர் 4 ஆம் தேதி விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது!
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறுவனம் தொடர்பான நிதி முறைகேடு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், 2011 - 12 நிதியாண்டுக்காக, அவர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை மீண்டும் விசாரிப்பதை எதிர்த்து, இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து தற்போது அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர். முதலில் இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க முடியாது என வருமானவரித்துறையினர் கூறிய நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் முன் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று வருமான வரித்துறை ஏற்கனவே கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது!.