கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா என்ற இளம்பெண் கடந்த ஜூன் 21-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு வந்தார். கணவரின் வரதட்சணை கொடுமையினால் அவர் தற்கொலை செய்து கொண்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு பயின்று வந்த விஸ்மயாவை, 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார், ஒரு ஏக்கர் நிலம் உள்ளிட்டவற்றை வரதட்சணையாகக் கொடுத்து கிரண்குமார் என்ற மோட்டார் வாகன ஆய்வாளருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இவ்வளவு வரதட்சணை கொடுத்த பின்னரும், விஸ்மயா பெற்றோர் வாங்கித்தந்த கார் பிடிக்கவில்லை எனக்கூறி, ரூ.10 லட்சத்தை ரொக்கமாக தரக்கூறி, கிரண்குமார் கொடுமைப்படுத்தியுள்ளார்.
தற்கொலைக்கு ஒரு நாள் முன்பு, வரதட்சணைக்காக கிரண் குமார் தன்னை துன்புறுத்தியதாகவும், தனது உடலில் காயங்கள் ஏற்பட்ட புகைப்படத்தையும் விஸ்மயா வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்திருந்தார். கல்வியறிவு அதிகமுள்ள கேரள மாநிலத்தில் நிகழ்ந்த இந்த மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விஸ்மயாவின் வாட்ஸ்-அப் செய்திகள், அழைப்புப் பதிவுகள் அடிப்படையில் கிரண் குமார் கைதுசெய்யப்பட்டார். கேரள அரசும் முதலில் அவரைப் பணி இடைநீக்கம் செய்து பின்னர் பணி நீக்கமும் செய்தது. இந்த வழக்கில், கேரள போலீசார் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கொல்லம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மேலும் படிக்க | கேரளாவை உலுக்கிய விஸ்மயா கொலை வழக்கு - கணவர் குற்றவாளி எனத் தீர்ப்பு
விசாரணை நிறைவடைந்த நிலையில் கிரண்குமார் குற்றவாளி என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஸ்மயாவின் தந்தை, தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளதெனக் குறிப்பிட்டார். இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, தனது வயதான பெற்றோரின் நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை அளிக்க வேண்டுமென கிரண்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், கிரண்குமாருக்குக் கொடுக்கும் தண்டனை முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும், தண்டனையைக் குறைக்கக் கூடாது எனவும் அரசுத் தரப்பு வாதிட்டது. இதனைத் தொடர்ந்து, கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.12.55 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சுஜித் தீர்ப்பளித்தார். இதில், ரூ.2 லட்சம் விஸ்மயாவின் பெற்றோருக்குத் தரப்படும்.
இந்த தண்டனை தனக்கு திருப்தி அளிப்பதாக விஸ்மயாவின் தந்தை விக்ரமன் தெரிவித்தார். கிரண்குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்த்ததாக விஸ்மயாவின் தாயார் கூறினார். இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வந்தபோது, விஸ்மயாவுக்கு வரதட்சணையாக அளித்த காரிலேயே அவரது குடும்பத்தினர் வந்தனர். விஸ்மயாவின் ஆத்மா இந்த காரில் இருக்கும் என நம்புவதாகக் கூறிய அவரது தந்தை, காரில் எப்போதும் ஒரு இருக்கையை காலியாகவே வைத்துள்ளதாகவும் கூறினார்.
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவி மையம்: 104
மேலும் படிக்க | மீண்டும் ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்த வரதட்சணை கொடுமை!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR