புது டெல்லி: வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை நடந்த வன்முறைகள் குறித்து மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் வேதனையடைந்துள்ளார். மேலும் வன்முறையைத் தவிர்க்கமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக் காரணமாக இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். அதில் காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் அடங்குவார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எம்.எல்.ஏக்கள் மற்றும் டெல்லியின் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளை சேர்ந்த அதிகாரிகளை அழைத்து, தனது இல்லத்தில் அவசர கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இந்த வன்முறை சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் கேஜ்ரிவால், "டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். நமது நகரத்தில் அமைதியை மீட்டெடுக்க நாம் அனைவரும் சேர்ந்து அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். வன்முறையைத் தவிர்க்கமாறு அனைவரையும் நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் இன்று மதியம் டெல்லி ஏற்பட்டுள்ள வன்முறை குறித்து ஆலோசனை செய்ய, முதல்வர், ஆளுநர் உட்பட முக்கிய அதிகாரிகளை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
டெல்லி காவல்துறை வடகிழக்கு டெல்லியின் நிலைமை "மிகவும் பதட்டமானது" என்று கூறியுள்ளது. "வடகிழக்கு டெல்லியில் இருந்து வன்முறை சம்பவங்கள் தொடர்பான அழைப்புகளை நாங்கள் தொடர்ந்து பெற்று வருகிறோம். போலீஸ் கமிஷனர் நேற்று இரவு சீலாம்பூர் டி.சி.பி அலுவலகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினார்" என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.
வடகிழக்கு டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நேற்று (திங்கள்கிழமை) வன்முறை பரவியதால் பல துணை ராணுவம் வீரர்கள் மற்றும் டெல்லி காவல்துறையினர் காயமடைந்தனர்.
பிங்க் லைன் மெட்ரோ வழித்தடத்தில் உள்ள ஜஃப்ராபாத், மவுஜ்பூர்-பாபர்பூர், கோகுல்பூரி, ஜோஹ்ரி என்க்ளேவ் மற்றும் சிவ் விஹார் நிலையங்கள் உட்பட ஐந்து டெல்லி மெட்ரோ நிலையங்கள் இன்று மூடப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் "வெல்கம்" மெட்ரோ நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன.