கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு கோழி பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெங்கரா மற்றும் கோடியாத்தூரில் உள்ள பண்ணையில் இந்த பறைவைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுமார் 12,900-க்கும் மேற்பட்ட கோழிகளை வெட்டி எறிக்குமாறு மாநில கால்நடை பராமரிப்புத் துறை முடிவு செய்து மாவட்டத்தில் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பண்ணை கோழிகளைத் தவிர, காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பண்ணைகளுக்கு அருகிலுள்ள கோழி மந்தை மற்றும் பிற வளர்ப்பு உயிரினங்களுக்கு பறவை காய்ச்சல் உள்ளதா என அடையாளம் காணப்பட்டு இதே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் பண்ணைகளில் பல பறவைகள் தொடர்ச்சியாக இறந்து வந்த நிலையில் பறவைகளுக்கு என்ன பிரச்சனை என ஆராய சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போபாலில் உள்ள ஆய்வகத்தில் இருந்து சோதனைகள் பறவை காய்ச்சலுக்கு நேர்மறையாக திரும்பிய பின்னர் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. வைரஸ் உறுதி செய்யப்பட்ட பின்னர், சனிக்கிழமை காலை கோழிக்கோடு கலெக்டரேட்டில் பல்வேறு துறைகளின் உடனடி கூட்டம் நடைபெற்றது.
பறவை காய்ச்சல் இன்னும் மனிதர்களுக்கு பரவவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பிரச்சினையை கையாள தலா ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட 25 அணிகளை இத்துறை அமைத்துள்ளது. மேலும் இந்த பண்ணைகளில் 10 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் அனைவரையும் எச்சரிக்கையாக இருக்குமாறு துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா தெரிவிக்கையில்., "பறவைக் காய்ச்சலைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. இது கோடைகாலத்தில், இதுபோன்ற நோய்கள் பறவைகளை பாதிக்கும். இதேப்போன்று கடந்த 2016-ல் ஏற்பட்டு ஏராளமான வாத்துகள் இறந்தபோது, சுகாதார மற்றும் கால்நடை துறைகள் அடங்கிய அணிகள் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க தீவிரமாக முயற்சி செய்தன. இதேப்போன்ற நிகழ்வு தற்போது 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவனமாக இருக்க வேண்டும். இது ஒரு சுழற்சி ஆண்டு என்பதால், தொற்று நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது காலநிலை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். சுகாதாரத் துறை அளித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்” என்று திருவனந்தபுரத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதனிடையே., கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக., 2016-ஆம் ஆண்டில் பறவைக் காய்ச்சலின் கடைசி பெரிய நிகழ்வு அமைந்தது. அலப்புழா மாவட்டத்தில், முக்கியமாக குட்டநாட்டில் வாத்துகள் மத்தியில் பறவை காய்ச்சல் முதலில் கண்டறியப்பட்டது. பறவை காய்ச்சல் பாதில்லை தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாத்துகள் இறந்தன. அது அந்த நேரத்தில் வாத்து விவசாயிகளை மோசமாக பாதித்தது குறிப்பிடத்தக்கது.