Maharashtra Assembly Election 2024 Pre Poll Survey: ஒட்டுமொத்த நாடே எதிர்பார்க்கும் ஒரே தேர்தல் என்றால் அது, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் 2024 தேர்தல் எனலாம். மொத்தமுள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவ. 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகளும் தெரியவரும் எனலாம்.
கடந்த தேர்தலில் நடந்தது என்ன?
முன்னதாக, 2019 சட்டப்பேரவை தேர்தலிலேயே எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது பாஜகவின் கூட்டணியில் இருந்த ஒன்றுபட்ட சிவசேனா, 2.5 வருடங்களுக்கு ஒருமுறை முதலைமைச்சரை மாற்றும் முறைக்கு பாஜக ஒத்துக்கொள்ளவில்லை என கூறி கூட்டணியில் இருந்து விலகியது. பாஜக தேர்தலுக்கு முன் அத்தகைய வாக்குறுதியை கொடுத்ததாகவும், தேர்தலுக்கு பிறகு அதற்கு ஒத்துழைக்கவில்லை எனவும் சிவசேனா வாதாடியது. ஆனால், பாஜக அதனை முற்றிலும் மறுத்தது, தேர்தல் நேரத்தில் அப்படி ஏதும் வாக்குறுதி கொடுக்கவில்லை என்றது. தேவேந்திர ஃபாட்னாவிஸை முதல்வராக்குவோம் என்றுதான் பிரச்சாரமும் செய்யப்பட்டதாக பாஜக தெரிவித்தது.
யாரும் பெரும்பான்மையை நிரூபிக்காததால் குடியரசு தலைவர் ஆட்சி 2019 நவம்பர் 12ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. தேவந்திர ஃபாட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். அதன்பின் திடீரென பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்ள நவம்பர் 26ஆம் தேதி ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபாட்னாவிஸ் தனது ராஜினாமாவை அறிவித்தார்.
மேலும் படிக்க | அறிமுகமானது JioStar OTT! இனி இந்த விஷயங்கள் இலவசமாக கிடைக்காது!
உருவான மகா விகாஸ் கூட்டணி
அதன்பின் மகா விகாஸ் கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றன. சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பின் 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் சிவசேனா இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாஜகவுடன் கூட்டணி அமைத்து, பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார், தேவேந்திர பாட்னாவிஸ் துணை முதல்வரானார்.
2023இல் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைந்தது. அஜித் பவார் தலைமையிலன தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜக பக்கமும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மகா விகாஸ் கூட்டணி பக்கம் இருந்தன. அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
பெரும் எதிர்பார்ப்பில் மகாராஷ்டிரா தேர்தல் 2024
இடையே 2024 மக்களவை பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி, அதாவது இந்தியா கூட்டணி கைப்பற்றியது. 17 தொகுதிகளை பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) வென்றது.
2022ஆம் ஆண்டு சிவசேனா பிளவுப்பட்ட பின்னர், மகாராஷ்டிரா அரசியல் களம் தினந்தினம் அனல் பறந்து வந்தாலும், இந்த சட்டப்பேரவை தேர்தல்தான் அதன் உச்சம் எனலாம். அரசியல் பரபரப்பு நிறைந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் 2024 மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே நடக்கிறது. இந்த முறை எந்த கூட்டணி ஆட்சி கைப்பற்றும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் இரு முகாம்கள் தேர்தலுக்கு பின் ஒன்றிணையுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.
மகா யுதி vs மகா விகாஸ்
இந்த சூழலில், மகா யுதி கூட்டணி சார்பில் பாஜக 149 தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81 தொகுதிகளிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 59 தொகுதிகளிலும், இதர கூட்டணி கட்சிகள் சேர்ந்து 5 தொகுதிகள் என மொத்தம் 286 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 2 தொகுதிகளில் போட்டியிடவில்லை.
மறுமுனையில், மகா விகாஸ் கூட்டணியில் காங்கிரஸ் 102 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 95 தொகுதிகளிலும், ஷரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 86 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 18 தொகுதிகளிலும் என 288 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு
இந்நிலையில், லோக் போல் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் இந்த முறை யார் ஆட்சியை கைப்பற்றப்போகிறது என கணித்திருக்கிறது. அந்த வகையில், ஒரே மாத காலமாக நடத்தப்படட் கள ஆய்வின் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளயிடப்பட்டிருப்பதாக லோக் போல் தெரிவித்திருக்கிறது.
The wait for #Maharashtra is over!
After conducting an extensive ground study for over a month, we are excited to present the mega survey report for the state of #Maharashtra.
Sample size:… pic.twitter.com/yCBwW5K7QN
— Lok Poll (@LokPoll) November 14, 2024
அதாவது, 288 தொகுதிகளிலும் சுமார் 300 பேரிடம் என மொத்தம் 86 ஆயிரத்து 400 பேரிடம் கருத்துக்களை பெற்று இந்த முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி 151 - 162 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், அவர்களே ஆட்சியை பிடிப்பார்கள் என்றும் லோக் போல் கணித்துள்ளது. பாஜகவின் மகா யுதி கூட்டணி 115 - 128 தொகுதிகளையும், மற்றவை 5 -14 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணித்துள்ளது.
மேலும் படிக்க | மணிப்பூரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! நடுங்க வைக்கும் சம்பவம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ