காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு முக்கியத்துவம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது!
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை மக்களவையில் பெறமுடியாமல் சென்றது.
முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்தை பெறமுடியாமல் சென்றது. இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.
ராகுல் காந்தி தன்னுடைய ராஜினாமா முடிவில் ஸ்திரமாக உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் கூடும் என தகவல் வெளியாகியது. இதனிடையே பிரியங்கா தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
ஆனால் பிரியங்கா காந்தி கட்சி தலைமை பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக இனி, காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுலுக்கு அடுத்தப்படியாக யார்? ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பதை தேர்வு செய்வது முக்கியம் பெற வாய்ப்பு உள்ளது.
It has been decided to hold the next Congress Working Committee Meeting on saturday, 10th of August 11am at AICC.@INCIndia @AICCMedia
— K C Venugopal (@kcvenugopalmp) August 4, 2019
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர்(பொறுப்பு) கே சி வேணுகோபால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்., “காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை வரும் 10-ம் தேதி காங்கிரஸ் தலைமையகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.