இறைச்சி மாடுகள் விற்கவும் வாங்கவும் சில கட்டுப்பாடுகள் விதித்து கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை கேரளா, மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதன் காரணமாக, விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மாட்டிறைச்சி தொழிலில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்தன. மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதுதொடர்பான மனுக்களை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளையும், சுப்ரீம் கோர்ட்டும் இந்த அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்தன.
இந்நிலையில், கடும் எதிர்ப்பு காரணமாக, இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கான தடையை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதற்காக கொண்டுவரப்பட்ட புதிய வரைவு விதிமுறைகளில், பழைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில், சந்தைகளில் கால்நடைகளை சித்ரவதை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, கால்நடைகளை அடையாளம் காண சூடு வைத்தல், கொம்புகளை நீக்குதல், எருமை மாடுகளின் காதுகளை துண்டித்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. தகுதியற்ற மற்றும் இளம் கால்நடைகளை சந்தைகளில் விற்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இது, விரைவில் அறிவிக்கையாக வெளியிடப்படுகிறது.