சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல்: சகிப்புத்தன்மையின்மையின் விளைவா?

Salman Rushdie : நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். 75 வயதான ஒரு எழுத்தாளர் மீது இவ்வளவு கோபம் ஏன்? கொலை செய்யத்துணியும் அளவுக்கு, அவர் அப்படி எழுதியது என்ன? 

Written by - Chithira Rekha | Last Updated : Aug 14, 2022, 01:52 PM IST
  • எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலின் பின்னணி
  • சர்ச்சையை ஏர்படுத்திய தி சாட்டனிக் வெர்சஸ் புத்தகம்
  • 24 வருடங்களுக்குப் பின் நடத்தபப்ட்ட தாக்குதல்
 சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல்: சகிப்புத்தன்மையின்மையின் விளைவா? title=

நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இந்தத் தாக்குதலில், படுகாயமடைந்த சல்மான் ருஷ்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ள சல்மான் ருஷ்டியால் தற்போது பேச முடிந்தாலும், அவர் ஒரு கண் பார்வையை இழக்கும் அபாயம் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 75 வயதான ஒரு எழுத்தாளர் மீது இவ்வளவு கோபம் ஏன்? கொலை செய்யத்துணியும் அளவுக்கு, அவர் அப்படி எழுதியது என்ன? 

சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்து இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் ஆவார். இவர் 14 நாவல்களை எழுதியுள்ளார். இவரது  ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ என்ற நாவலுக்கு, இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான புக்கர் விருது கிடைத்தது. 

1945-க்குப் பிறகு உள்ள 50 தலைசிறந்த எழுத்தாளர்கள் வரிசையில், சல்மான் ருஷ்டிக்கு ‘தி டைம்ஸ்’ நாளிதழ் 13-வது இடத்தை வழங்கியது. 2005-ல் இவரது ‘ஷாலிமார் தி கிளவுன்’ நாவலுக்கு இந்தியாவின் மதிப்புமிக்க ‘ஹட்ச் கிராஸ்வேர்டு புக்’ விருது கிடைத்தது. இவர் கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார். 

மேலும் படிக்க | உயிருக்கு போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி! கத்திக்குத்து தாக்குதல் வீடியோ வைரல்

அவரது நான்காவது நாவலான The Satanic Verses 1988-ம் ஆண்டு வெளியானது. இங்கிலாந்தில் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்ற இந்த நாவலுக்கு Whitbread விருது வழங்கப்பட்டது. ஆனால், இந்நாவல் முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி பெரும் சர்ச்சை எழுந்தது. இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரானில் அப்புத்தகத்திற்குத் தடை விதித்த மதத்தலைவர் அயதுல்லா ருஹோல்லா, சல்மான் ருஷ்டியைக் கொல்ல அழைப்பு விடுத்து ஃபத்வா எனப்படும் மத உத்தரவைப் பிறப்பித்தார். மேலும் அவரது தலைக்கு 3 மில்லியன் டாலர் விலையும் நிர்ணயிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு இந்தத்தொகை 3 புள்ளி 3 மில்லியன் டாலர்களாக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக சுமார் 9 ஆண்டுகள் அவர் போலீஸ் பாதுகாப்பிலேயே இருக்க நேரிட்டது. இந்த மிரட்டலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சல்மான் ருஷ்டி, இந்த பரிசுத் தொகை மீது மக்களுக்குப் பெரிதாக ஆர்வமில்லை போலும் எனக் கேலி செய்தார். 

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடைபெறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக அவர் மீது நடைபெற்ற பல கொலை முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. ஜப்பான் மொழியில் இந்த நாவலை மொழிபெயர்ப்பு செய்த ஒருவர் 1991-ல் கொலை செய்யப்பட்டார். இந்தப் புத்தகம் ஈரான் மட்டுமின்றி, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சூடான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, கென்யா, தாய்லாந்து, தான்சானியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், வெனிசுலா ஆகிய நாடுகளில் புத்தகம் தடை செய்யப்பட்டுள்ளது.

சல்மான் ருஷ்டியைக் கொலை செய்ய முயன்ற இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 24 வயதுடைய அந்த இளைஞரின் பெயர் ஹாதி மடார் என்பதும், அவர் லெபனானைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. ஈரான் மதத் தலைவர் அயதுல்லாவின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த அவர், அயதுல்லாவின் பத்வாவை நிறைவேற்றும் வகையில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஹாதி மடார் வாக்குமூலம் அளித்துள்ளார். 

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்த எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கிற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவரது ட்விட்டர் பக்கத்தில்  ‘‘கவலைப்படாதீர்கள் அடுத்து நீங்கள் தான்” என ஒரு நபர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலும், எழுத்தாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதும் சகிப்புத்தன்மையின்மையின் விளைவாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | இங்கிலாந்தில் கடும் குடிநீர் பஞ்சம்; பரிதவிக்கும் மக்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News