EPF Balance Check: நாம் பெரும் சம்பளத்தின் ஒரு பகுதி, பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதற்கு சமமான தொகையை, நம்மைப் பணியில் அமர்த்தியுள்ள முதலாளி அல்லது நிறுவனம், PF கணக்கில் முதலீடு செய்யும்.
சம்பளம் பெறும் அனைவருக்கும் pf கணக்கு இருக்கும். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அல்லது இபிஎப் என்பது ஊழியர்களுக்கான மிகச் சிறந்த சேமிப்பு திட்டம். இதன் மூலம் நீண்ட காலத்திற்கு, பெருமளவு நிதி சேமிக்கப்படுகிறது.
EPFO எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் இயக்கப்படும் பிஎஃப் கணக்கில், ஒவ்வொரு மாதமும், பணியாளரின் சம்பளத்தில் 12% பிடித்தம் செய்யப்பட்டு டெபாசிட் செய்யப்படுகிறது. நிறுவனமும் அதே தொகையை ஊழியரின் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. இந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான வட்டியையும் அரசு செலுத்துகிறது.
சில சமயங்களில் ஊழியரின் சம்பளத்தில் இருந்து பணத்தை பிடித்தம் செய்தும் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யாத சம்பவங்கள் சில வெளிச்சத்துக்கு வந்துள்ளன. எனவே, உங்கள் நிறுவனம் உங்கள் சம்பளத்தில் பிஎஃப் என்ற பெயரில் பிடித்தம் செய்யும் பணமும் உங்கள் பிஎஃப் ஃபண்டில் டெபாசிட் செய்யப்படுகிறதா இல்லையா,அதில் கிடைத்துள்ள வட்டி எவ்வளவு, எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை அவ்வபோது அறிந்து கொள்வது அவசியம்.
PF இருப்பை சரிபார்க்கும் ஆன்லைன் முறை: இதற்கு, முதலில் நீங்கள் EPFO உறுப்பினர் பாஸ்புக் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். பின்னர் உங்கள் UAN எண்ணின் உதவியுடன் போர்ட்டலில் உள்நுழையவும். இதற்கு, உங்கள் UAN எண்ணை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
PF கணக்கு விவரங்கள்: UAN எண்ணின் உதவியுடன் போர்ட்டலில் உள்நுழைந்த பின், நீங்கள் இருப்பை அறிய விரும்பும் PF கணக்கைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும். நீங்கள் இதைச் செய்தவுடன், உங்கள் கணக்கின் விவரங்கள் அனைத்தையும் நீங்கள் காணலாம்.
எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பைச் சரிபார்க்கும் முறை: எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பைச் சரிபார்க்கலாம். உங்கள் தொலைபேசியில் இருந்து UAN 12 இலக்கங்களுடன், EPFOHO UAN என்று எழுதி 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஆனால் செய்திகளை அனுப்ப உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை தான் பயன்படுத்த வேண்டும். இது தவிர, உங்கள் UAN எண் ஆக்டிவேட் செய்யப்பட்டிருப்பது மிகவும் முக்கியம்.
UMANG செயலியின் மூலம் PF இருப்பைச் சரிபார்க்கும் முறை: UMANG செயலியில் PF தொடர்பான பல தகவல்களைப் பெறுவீர்கள். UMANG பயன்பாட்டிற்குச் சென்று EPFO பிரிவில் கிளிக் செய்யவும்.பின்னர் உங்கள் UAN எண்ணின் உதவியுடன் போர்ட்டலில் உள்நுழைக.உள்நுழைந்த பிறகு, உங்கள் PF இருப்பு மற்றும் கணக்கு தொடர்பான பல தகவல்களைப் பெறலாம்.
UAN எண் இல்லாமல் PF கணக்கில் உள்ள இருப்பை அறியும் முறை: முதலில் உங்கள் PF கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும். அழைப்பை மேற்கொள்ளூம் போது 2 ரிங் அடித்த பின்னர் உடனேயே அழைப்பு துண்டிக்கப்பட்டு, உடனேயே பிஎப் கணக்கு குறித்த தகவல் கிடைக்கும்.
PF கணக்கு விவரங்கள்: 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ் கால் கொடுத்த நிலையில், EPFO-லிருந்து உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு SMS செய்தி வரும். அதில், கணக்கு விவரங்கள் மற்றும் இருப்பு விவரங்கள் அனைத்தும் இருக்கும்.