இலங்கையின் சிலாபாத் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்ற நிலை உண்டாகி ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது!
சிலாபாத் பகுதியில் இன்று ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் இட்ட முகநூல் பதிவே காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். எனினும் இவர் இட்ட பதிவொன்றைத் தவறாக விளங்கிக்கொண்ட சிங்கள இளைஞர் குழுவே குழப்பத்தை விளைவித்துள்ளது எனவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
முன்னாதக "நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்தான தனது கருத்தை வெளியிட்ட ஹஸ்மார் ஹமீட் என்ற வர்த்தகர், "அளவுக்கதிகமாகச் சிரித்தால் ஒரு நாள் அழ வேண்டியும் வரும் (Dont laugh more 1 day u will cry)" என்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .
ஆனால், அதனை மொழிபெயர்த்த சிங்கள இளைஞர்கள் சிலர், "இன்று மட்டும்தான் நீங்கள் சிரிப்பீர்கள்; நீங்கள் அழ இன்னும் ஒரு நாள் இருக்கின்றது" என்று பதிவிடப்பட்டதாக உணர்ந்து அதன் உண்மைத் தன்மையைக் அறிய குறிப்பிட்ட வர்த்தகரின் கடைக்கும், காவல் நிலையத்துக்கும் சென்று வாதத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வின் போது எழுந்த பிரச்சினை பூதாகரமாக மாற, அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைமையையடுத்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இதனையடுத்து சிலாபம் காவல்துறை ஊரடங்குச் சட்டம் உடன் அமுலுக்கு கொண்டுவந்தது. நாளை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாளை திங்கட்கிழமை அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கலாம் எனச் செய்திகள் பரவியிருந்த நிலையில், குறித்த முஸ்லிம் வர்த்தகரின் பதிவை அதனுடன் ஒப்பிட்டு சிங்கள இளைஞர்கள் பார்த்ததால் இந்தக் கலவரம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.