PM Modi Tweet About Palestine Israel Conflict: இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அபு அல்ஹைஜா, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியா நட்பு நாடு என்றும், காசா பகுதியில் தற்போது நிலவும் நெருக்கடியை தீர்க்க இந்தியா தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், அபு அல்ஹைஜாவின் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதலை 'பயங்கரவாத தாக்குதல்' என இந்தியா கூறியதுடன், அவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
காசா பகுதி மீதும் குண்டுகளை தொடர்ந்து வீசி வரும் இஸ்ரேல்
சனிக்கிழமையன்று இஸ்ரேலிய நகரத்தின் மீது ஹமாஸ் ராக்கெட்டுகளை வீசியதில் இருந்து, இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதி மீதும் குறிப்பாக ஹமாஸ் நிலைகள் மீதும் குண்டுகளை வீசி வருகிறது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரில், மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றன. அதேநேரம் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை இஸ்ரேலின் கொள்கைகளின் விளைவே என பல மத்திய கிழக்கு நாடுகள் கூறியுள்ளனர்.
இஸ்ரேலுடன் இந்திய மக்கள் நிற்கிறார்கள் -பிரதமர் மோடி
அதே நேரத்தில், ஹமாஸ் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பக்கம் இந்தியா நிற்கிறது. எந்தவித பயங்கரவாதமாக இருந்தாலும் இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது என்றும், இந்த கடினமான நேரத்தில், இந்திய மக்கள் இஸ்ரேலுடன் வலுவாக நிற்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
I thank Prime Minister @netanyahu for his phone call and providing an update on the ongoing situation. People of India stand firmly with Israel in this difficult hour. India strongly and unequivocally condemns terrorism in all its forms and manifestations.
— Narendra Modi (@narendramodi) October 10, 2023
ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களை இஸ்ரேல் மதிப்பதில்லை -அபு அல்ஹைஜா
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசு நியமித்துள்ள இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அபு அல்ஹைஜா, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இங்கு நெருக்கடி மற்றும் பிரச்சனை ஏற்படக் முக்கியக் காரணம் இஸ்ரேலின் கொள்கைகள் தான். இந்த போருக்கு சர்வதேச சமூகமும் பொறுப்பு. பாலஸ்தீனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை 800 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இஸ்ரேல் ஒன்றைக் கூட மதிக்கவில்லை, ஏற்கவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை இஸ்ரேல் விலகிக் கொண்டு வந்தால், தாக்குதல்களும் நிறுத்தப்படும் என்றார்.
பேச்சுவார்த்தையில் இந்தியா தலையிட்டு உதவ வேண்டும் -பாலஸ்தீன தூதர்
பாலஸ்தீன தூதர் அபு அல்ஹைஜா மேலும் கூறுகையில், பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு பாலஸ்தீனம் எப்பவும் எதிரானது. இந்த நெருக்கடியை அமைதியான முறையில் தீர்வு காணவே பாலஸ்தீனம் விரும்புகிறது. இது சம்பந்தமாக எங்கள் நாட்டு அதிபர் பல ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பில் இருக்கின்றார். இந்தியா இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் நண்பன். இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா இதில் தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு உதவ வேண்டும் என விரும்புகிறோம் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் மோசமானது பிரதமர் பெஞ்சமின் ஆட்சி -அபு அல்ஹைஜா
காஸாவை இஸ்ரேல் முழுமையாக முற்றுகையிட்டு, அத்தியாவசிய அடிப்படை வசதிகளை வெட்டியது குறித்து, அபு அல்ஹைஜா கூறுகையில், காசா மாகாணத்திற்கு மின்சாரம் மற்றும் உணவு விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இது ஒருவகையில் போர் நடவடிக்கை. பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் மோசமான ஆட்சியாகும் என விமர்சித்தார்.
இஸ்ரேல் இந்தப் போரை விரும்பவில்லை -பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், "இஸ்ரேல் இந்தப் போரை விரும்பவில்லை. ஹமாஸ் மிகவும் கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் இந்தப் போரை நம் மீது திணித்துள்ளது. இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கவில்லை. ஆனால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும்" எனக் கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ