பரவும் புதிய வகை கொரோனாவைரஸ் இன்னும் நம் கட்டுக்குள்தான் உள்ளது: WHO

சுமார் 30 நாடுகள் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணிக்கும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 22, 2020, 11:30 AM IST
  • புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு இன்னும் நம் கட்டுக்குள்தான் இருக்கிறது-WHO.
  • பிரிட்டிஷ் அதிகாரிகள் வைரசின் புதிய வகை 70 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது என்று கூறினர்.
  • இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து.
பரவும் புதிய வகை கொரோனாவைரஸ் இன்னும் நம் கட்டுக்குள்தான் உள்ளது: WHO title=

கொரோனா வைரஸ் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வைரசின் ஒரு புதிய வகை பற்றிய அச்சம் தற்போது உலகம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது. அதிக பரிமாற்ற வீதத்துடன் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு இன்னும் நம் கட்டுக்குள்தான் இருக்கிறது என்றும், நம் கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து அது சென்றுவிடவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு திங்களன்று தெரிவித்தது.

தற்போதுள்ள நடவடிக்கைகளைப் பயன்படுத்தி இதை கட்டுப்படுத்த முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு திங்களன்று தெரிவித்துள்ளது.

"இந்த தொற்றுநோய்களின் வெவ்வேறு புள்ளிகளில் நாம் மிக அதிகமான பரவல் வீதத்தை கண்டுள்ளோம். அதை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்" என்று WHO-இன் அவசரநிலை தலைவர் மைக்கேல் ரியான் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

"எனவே அந்த வகையில் பார்த்தால், இந்த நிலைமையும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பால் இல்லை. ஆனால் இந்த புதிய வகை மீதான தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, பிரிட்டிஷ் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், கொரோனா வைரசின் (Coronavirus) இந்த புதிய மாறுபாடு கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு போய்விட்டது என்று கூறியிருந்தார். பிரிட்டிஷ் அதிகாரிகள் இது முதலில் பரவிய பிரதான மாறுபாட்டை விட 70 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது என்றும் கூறியுள்ளனர்.

"நாங்கள் தற்போது வைத்திருக்கும் நடவடிக்கைகள் சரியான நடவடிக்கைகள்" என்று ரியான் கூறினார். "நாங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதையே தொடர்ந்து செய்ய வேண்டும். இதை இன்னும் கொஞ்சம் அதிக தீவிரத்தோடு செய்ய வேண்டியிருக்கும். இப்படி செய்து இந்த வைரசின் புதிய மாறுபாடு நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்." என்று ரியான் தெரிவித்தார்.

ALSO READ: இந்தியா இங்கிலாந்து இடையிலான விமானங்கள் ரத்து: பரவும் புதிய வகை கொரோனா வைரசின் தாக்கம்

சுமார் 30 நாடுகள் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து (South Africa) பயணிக்கும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளன. அங்கு உருவாகியுள்ள புதிய மாறுபாடு உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"பல அம்சங்களில் நாம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். வைரஸ் பரவுவதில் இன்னும் கொஞ்சம் அதிக தீவிரம் ஏற்பட்டாலும், அதை நம்மால் நிறுத்த முடியும். அதற்கான வழிமுறைகள் நம்மிடம் உள்ளன” என்று ரியான் கூறினார்.

இதற்கிடையில், இங்கிலாந்தில் (England) இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களையும் இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்துவதாக மத்திய அரசு திங்களன்று அறிவித்ததாக விமான அமைச்சகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

தொற்றுக்கான மிக அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்ட கொரோனா வைரஸின் ஒரு புதிய பிறழ்வு நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) எச்சரித்ததைத் தொடர்ந்து, பல ஐரோப்பிய நாடுகளும், பிற நாடுகளும் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

ALSO READ: உருமாறும் கொரோனா குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை: ஹர்ஷ்வர்தன்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News