அமெரிக்க அரசியலில் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் மருமகன், அதிபரின் மூத்த ஆலோசகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள இவர், அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அம்சங்களை கவனிப்பார்.
குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அமெரிக்க அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வரும் ஜனவரி 20-ம் தேதியன்று பதவியேற்க உள்ளார் டொனால்டு டிரம்ப். இதையொட்டி, புதிய அமைச்சரவை மற்றும் அதிகாரிகள் நியமனம் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முந்தைய ஒபாமா ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட அரசு உயர் அதிகாரிகளுக்குப் பதிலாக, டிரம்ப் ஆதரவாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக, தற்போது டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், அதிபரின் மூத்த ஆலோசகர் என்ற பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜாரெட் குஷ்னர், டிரம்பின் மகள் இவாங்காவை திருமணம் செய்துள்ளார்.
முன்னதாக, தனது மருமகனை ஒரு மிகப்பெரிய சொத்து என்று புகழ்ந்துள்ள டொனால்ட் டிரம்ப், நிர்வாகத்தில் தலைமைப்பண்புமிக்க ஒரு முக்கிய பொறுப்பை அவருக்கு அளிப்பதில் தான் பெருமையடைவதாக தெரிவித்தார்.