பொதுவாக ஏழ்மையான குடும்பப் பின்னனியைச் சேர்ந்த இளைஞர்கள், தீவிரவாத அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத இயக்கங்களில் சேர்வதுண்டு. ஆனால், அய்மன் - அல் - ஜவாஹிரியின் கதை அதுவல்லை. அவர் எகிப்தின் கெய்ரோ நகரைச் சேர்ந்த செல்வாக்கான குடும்பத்தில் 1951-ம் ஆண்டு பிறந்தவர். ஜவாஹிரியின் தாத்தா கெய்ரோவில் உள்ள மிக முக்கியமான மசூதிகளில் ஒன்றான அல்-அஸ்ரினின் இமாம் ஆவார்.
இவரது தந்தை மருத்துவர் ஆவார். 15 வயதில் அய்மன் - அல் - ஜவாஹிரி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஏற்றுக் கொண்டார். 1966 -ம் ஆண்டு எகிப்து அரசைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்ட இஸ்லாமிய எகிப்திய எழுத்தாளர் சையத் குதுப்பின் கருத்துக்களால் அவர் ஈர்க்கப்பட்டார்.
1981-ம் ஆண்டு எகிப்து அதிபர் அன்வர் -அல்- சதாத் படுகொலையில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டபோது தான், அய்மன் - அல் - ஜவாஹிரி வெளியுலகிற்கு அறிமுகமானார். இவ்வழக்கில், சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்றதாக கைதான அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
1970 களில் கெய்ரோ மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவருடன் பயின்றவர்கள் ஜவாஹிரி குறித்து கூறும்போது, படிக்கும்போது ஜவாஹிரி சினிமாவுக்குச் சென்று, இசையைக் கேட்டு, நண்பர்களுடன் நகைச்சுவையாக விளையாடிய ஒரு கலகலப்பான இளைஞனாக இருந்ததாக கூறியுள்ளனர். ஆனால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் முற்றிலும் மாறுபட்ட இளைஞராக இருந்ததாக அவருடன் படித்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | பின் லேடனின் வலது கையாக இருந்த அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார்: ஜோ பைடன்
அறுவை சிகிச்சை நிபுணரான ஜவாஹிரி சிறையில் இருந்து விடுதலையான பின், பாகிஸ்தான் சென்ற அவர், சோவியத் படைகளுடன் போரிட்டு ஆப்கானிஸ்தானில் காயமடைந்த இஸ்லாமிய முஜாஹிதீன் கொரில்லாக்களுக்கு சிகிச்சை அளித்தார். இந்த சந்தர்ப்பத்தில் தான் அவருக்கு பின்லேடனுடன் பழக்கம் ஏற்பட்டது.
1993-ம் ஆண்டு எகிப்தில் இஸ்லாமிய ஜிஹாத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜவாஹிரி, தூய்மையான இஸ்லாமிய அரசை அமைப்பதற்கான பிரச்சாரத்தில் முன்னணி நபராக இருந்தார். இதில், 1,200க்கும் மேற்பட்ட எகிப்தியர்கள் கொல்லப்பட்டனர். 1995-ம் ஆண்டு எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை கொல்ல முயற்சித்ததைத் தொடர்ந்து, அய்மன் - அல் - ஜவாஹிரி தேடப்படும் நபர் ஆனார்.
1995-ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் உள்ள எகிப்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த ஜவாஹிரி உத்தரவிட்டார். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு கார்கள் தூதரத்தில் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். 1999-ம் ஆண்டு எகிப்திய இராணுவ நீதிமன்றம் ஜவாஹிரிக்கு மரண தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து, அல் கொய்தாவை உருவாக்க பின்லேடனுடன் இணைந்து செயல்பட்டார் அய்மன் - அல் - ஜவாஹிரி.
செப்டம்பர் 11, 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அல் ஜவாஹிரிக்கு முக்கிய பங்குண்டு. அந்த காலக்கட்டத்தில் அவர், ஒசாமா பின் லேடனின் வலதுகரமாகச் செயல்பட்டார். 2011-ம் ஆண்டு ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்னர் அல் ஜவாஹிரி அல் காய்தா அமைப்பின் தலைவரானார்.
பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான தடைசெய்யப்பட்ட எல்லையில் ஜவாஹிரி பதுங்கியிருப்பதாக நம்பப்பட்டது. இந்த ஆண்டு, ஜவாஹிரியின் மனைவி, மகள் மற்றும் அவரது குழந்தைகள் - காபூலில் உள்ள பாதுகாப்பான வீட்டிற்கு இடம்பெயர்ந்ததை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அதே இடத்தில்தான் ஜவாஹிரியும் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, வீட்டின் பால்கனியில் வெளியே வந்தபோது, அய்மன் - அல் - ஜவாஹிரி ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ