பிரதமர் மோடி 5 நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.
முதற்கட்டமாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்ற பிரதமர் மோடி அந்த பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் இரவு, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு வந்தார்.
அந்நாட்டு வெளியுறவுச் செயலர், போரீஸ் ஜான்சன் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடி நேற்று காலை, லண்டன் டவுனிங் தெருவில் உள்ள, பிரிட்டன் பிரதமர் தெரசா மே வீட்டுக்கு சென்றார்.
இருவரும், இந்தியா - பிரிட்டன் இடையேயான பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.
பின்னர், லண்டனில் உள்ள, வெஸ்ட்மின்ஸ்டர் சென்ட்ரல் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நேரடியாக எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி விடையளித்து பேசினார்.
கேள்விகளுக்கு பதிலளித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியா, ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது. இங்கு வந்திருக்கும் நான், இந்தியாவின் பிரதமராக உள்ள, 125 கோடி இந்தியர்களின் சேவகனாக வந்துள்ளேன்.
சாதாரண டீ விற்கும் நபர் கூட, நாட்டின் பிரதமர் ஆக முடியும் என்பதே, ஜனநாயகத்தின் சிறப்பாகும்.
நாட்டின், 125 கோடி மக்களையும் என் குடும்பத்தினராகவே நினைக்கிறேன். எனவே, நாட்டிற்காக உழைப்பதில், எனக்கு எந்த சுமையும் தெரிவதில்லை.
நான், அரசியல் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவன் அல்ல. எனவே, நாட்டிற்கு உழைக்கும் நோக்கத்துடன் மட்டுமே செயலாற்றி வருகிறேன்.
குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, வயது முதிர்ந்தோர்க்கு, மருத்துவ சிகிச்சை. இவை மூன்று சிறப்பான வகையில் கிடைத்துவிட்டால், அந்த நாடு முன்னேற்றப்பாதையில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. பெண் குழந்தைகளை பாதுகாப்பதில், நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது.
எனக்கு, பிரதமர் என்ற சேவகன் பணி கிடைத்துள்ளது. அதன் மூலம், நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
#WATCH Live from London: Prime Minister Narendra Modi at #BharatKiBaatSabkeSaath event at Central Hall Westminster. https://t.co/fqYzelOaHy
— ANI (@ANI) April 18, 2018