தமிழ் மக்கள் மீது பிற மொழியை பாஜக திணிக்கிறது எனக் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார். தமிழ் அழகிய மொழி தமிழ் மக்கள் மீது பிற மொழியை பாஜக திணிக்கிறது என்கிறார். தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது பக்தவச்சலம் காலத்தில் தான் காங்கிரஸின் இந்தி திணிப்பை எதிர்த்து இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழை காக்க மாணவர்களால் பெரிய அளவில் நடைபெற்றது, அதில் கலந்துகொண்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் 20 க்கும் மேற்பட்டவரை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது அன்றைய காங்கிரஸ் ஆட்சி. காங்கிரஸ் ஆட்சிக்கு தமிழகத்தில் கல்லறை கட்டியது இந்தி எதிர்ப்பு போராட்டம்.
தற்போதைய மோடி அரசு இந்தியை திணிக்கவில்லை, தேசிய மொழி இந்தி மொழி பயன்பாட்டை மத்திய அரசு நிர்வாகத்தில் அதிக அளவில் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது நம்ப ஊர் பா சிதம்பரம் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு என்பது தான் உண்மை அதன் படி மத்திய அரசின் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது, எங்கேயும் வற்புறுத்தி திணிக்கப்பட்ட வில்லை.
தாய் மொழி கல்வியே சிறந்தது பிராந்திய மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று தான் மோடி அரசும் செயலாற்றி வருகிறது. ராகுல் குற்றம் சாட்டும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் மாநாட்டு தீர்மானமும் தாய் மொழி கல்வி ஆதரவானதே.
மோடி அரசை ஆர் எஸ் எஸ் இயக்கம் பின்னால் இருந்து இயக்குவதாக கூறும் ராகுல் காந்தி அவர்களே அன்றைய மண் மோகன்சிங்கை வெறும் பொம்மையாக முன்னிறுத்தி இந்தியாவை ஆண்டது உங்கள் குடும்பம் தானே. மந்திரி சபை தீர்மானத்தை கிழித்து போட்ட நீங்கள் தான் முந்தய ஐக்கிய முன்னணி அரசின் பல முக்கிய முடிவுகளை எடுத்தீர்கள் என்று உங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் குற்றம் சாட்டியது உங்களை தானே.
விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் நீங்கள் தமிழக விவசாயிகளுக்கு வேண்டிய காவேரி நீரை உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனே மதித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உங்கள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிட்டு தமிழகத்திற்கு உதவலாமே.
ஏழை குடும்பத்தில் பிறந்து இளமையில் டீ விற்று வாழ்ந்து, ஆர் எஸ் எஸ் சில் இணைந்து மக்கள் பணியாற்றி, கட்சி பணியாற்றி, மாநில முதல்வராக பின்பு பாரத பிரதமராக உயர்ந்த உத்தமர் மோடியை வாரிசு அரசியல்வாதியான நீங்கள் விமர்சிப்பது தங்கத்தை பார்த்து பித்தளை இளிப்பது போல தான்.
நேரு குடும்ப வாரிசு, தேசபிதா காந்தியின் பெயரில் பின்னால் ஒளிந்து கொண்டு பரம்பரை பரம்பரையாக 6 தலைமுறை ஆட்சி 60 ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்த நீங்கள் தான் இந்த நாட்டின் விவசாயிகளின் அவலத்திற்கும், இளைஞர்களின் ஏமாற்றத்திற்கும் மூல காரணம். 60 ஆண்டு அவலத்தை 4 ஆண்டுகளில் சரிசெய்ய முடியுமா?
பொதுமக்களுக்கு கழிப்பிட வசதிகூட மோடி அரசு வந்த பின்பு தான் பல கோடி ஏழை பெண்களுக்கு முழுவதுமாக கிடைத்தது.
மோடி அவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விடுமே என்று பதறுகிறார்கள், ஊழலில் திளைத்த காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிய மக்களின் ஏகோபித்த ஜனநாயக உணர்வுகளை வெறும் வாக்குச்சீட்டு எந்திர மோசடி என்று கொச்சை படுத்தாதீர்கள்.
அம்பானியும், அதானியும் கோடிஸ்வரர்களானது உங்கள் 60 ஆண்டுகளில் தான் என்பது உண்மை. கண்ணாடி கூட்டுக்குள் அமர்ந்து ராகுல் கல் வீசக்கூடாது என எச்சரிக்கிறோம்.
இவ்வாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.