மதுரை: கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்கை மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இம்மாதம் நிறைவடைந்த நிலையில், புதிதாக உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்களுக்கான உத்தரவை தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சங்கங்களுக்கு மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வந்தது.
முன்னதாக, இது தொடர்பாக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த மனு தொடர்பாக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதைதொடர்ந்து, இந்த வழக்குகள் நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தேர்தல் நடைமுறைகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துக்கொண்டே வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தலாம் ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை மே மாதம் இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.