விஜயகாந்த் அரசியல் வாழ்வின் திருப்பம்... மண்டபம் இடிப்பு - தேமுதிக அலுவலகம் உருவான கதை!

Vijayakanth DMDK Office History: விஜயகாந்தின் அரசியல் வாழ்வில் மிக முக்கியத்துவம் வாயந்த அவரின் கோயம்பேடு ஆண்டாள் அழகர் திருமணம் மண்டபம் இடிப்பு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகம் உருவாக்கம் ஆகியவை குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 28, 2023, 04:53 PM IST
  • விஜயகாந்த் இன்று காலை காலமானார்.
  • தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்ட உள்ளது.
  • நாளை மாலை 4.45 மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெறும்.
விஜயகாந்த் அரசியல் வாழ்வின் திருப்பம்... மண்டபம் இடிப்பு - தேமுதிக அலுவலகம் உருவான கதை!  title=

Vijayakanth DMDK Office History In Tamil: ஏழைப்பங்காளன், கேப்டன், புரட்சி கலைஞர் என பல பெயர்களில் மக்களால் புகழ்பட்டவர் விஜயகாந்த். நடிகராக திரைத்துறையில் அறிமுகமாகி உச்சம் தொட்ட பின் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு சேவையாற்றி, களத்தில் வேரூன்றியவர், விஜயகாந்த். தொடர்ந்து, நடிகர் சங்க தலைவராக திறம்பட செயல்பட்டு, தனது களத்தை விரிவாக்கி தமிழக அரசியலிலும் கால்பதித்தார்.

மக்களுடன் விஜயகாந்த்

தமிழ் திரைப்படங்களை தவிர்த்து வேற்று மொழிகளில் நடிக்கக் கூடாது என்ற பிடிவாதம், ஏழை மற்றும் உதவி கேட்டு வரும் மக்களுக்கு இல்லை என்று சொல்லாத மனம்; தன்னை சந்திக்க வரும் அனைவரும் உணவளித்து அனுப்புவது; இளம் இயக்குநர்களுக்கு, திரைப்பட கல்லூரியில் பயின்றவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பது; படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சமமாக நடத்துவது என அவர் தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மக்களுடன் இரண்டற கலந்துவிட்டார். 

தொடர்ந்து அவரின் அரசியல் வாழ்வில் அவர் எதிர்பார்த்த தொடக்கம் கிடைத்தாலும், அதன்பின் அவர் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கவில்லை எனலாம். தேர்தல் அரசியலுக்கு வந்து, இருபெருந் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தன்னை அறிவித்துக்கொண்டு 2006 சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2009 மக்களவை தேர்தலை தனித்து நின்று தேமுதிக சந்தித்தது.

மேலும் படிக்க | விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

மாற்று சக்தி விஜயகாந்த்

இவற்றில், முறையே 8.4 மற்றும் 10 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றது. இதற்கு அடிதளம் அவரின் ரசிகர் மன்ற பணிகளை சொல்லலாம். 2000ஆம் ஆண்டில் அவரது ரசிகர் மன்றத்திற்கு கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 2001ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அவரின் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டு வெற்றியையும் பெற்றனர். அவர் தன்னை ஒரு மாற்று சக்தியாக இந்த இடத்தில் இருந்துதான் பார்க்க தொடங்கினார் எனலாம். 

முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே அவர்களுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார், விஜயகாந்த். இருப்பினும், அவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நல்ல புரிதலில் இருந்தாலும், ஒரு சம்பவம் அவரிடம் இருந்து முற்றிலுமாக விலக வைத்தது எனலாம். அச்சம்பவம் குறித்து இதில் காணலாம். 

விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் 

சென்னை கோயம்பேடு பகுதியில் விஜயகாந்திற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாணம் மண்டபம் இருந்தது. அதாவது, தற்போது விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைமை அலுவலகம் இருந்த அதே பகுதியில்தான் அந்த மண்டபம் இருந்தது. அந்த மண்டபம்தான் தற்போது அலுவலகமாக மாறியுள்ளது எனலாம். கோயம்பேடு நூறடி சாலையில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது அந்த கல்யாண மண்டபம். அந்த இடம் பாலம் கட்டத் தேவைப்படுவதாக கூறி மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்பினர். 

மேலும் படிக்க | பெரியார் to விஜயகாந்த்..தமிழக தலைவர்களை காவு வாங்கும் டிசம்பர் மாதம்!

இதுதொடர்பாக, வழக்கு நடத்தி அதில் தோல்வியும் கண்ட விஜயகாந்த் அந்த கல்யாண மண்டப இடத்தை அரசிடம் ஒப்படைத்தார். முன்னதாக, தன்னுடைய மண்டபத்தை இடிக்க வேண்டாம் அப்போதையை முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை விடுத்து, அதற்கான வேறு மாற்று பிளானையும் கொடுத்ததாகவும் அது ஏற்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இடிந்துபோனார் விஜயகாந்த்!

தொடர்ந்து, அந்த மண்டபம் இடிக்கப்பட்டது, இடிந்து போனார் விஜயகாந்த். இந்த சம்பவத்திற்கு விஜயகாந்த் திமுக மீதும், கருணாநிதி மீதும் கடுமையான மோதல் போக்கை கைக்கொண்டார். வேண்டுமென்றே தனது மண்டபத்தை இடிப்பதாகவும், தனது அரசியல் பயணத்தை முடக்கவே இந்த செயல்கள் நடந்ததாகவும் விஜயகாந்த் அப்போது குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, திமுகவோடு ஒரு காலத்திலும் கூட்டு இல்லை என்பதை உறுதியாக்கினார். சொன்னதுபோலவே, கடைசி வரை திமுகவோடு கூட்டணி வைக்கவில்லை.

மொத்தம் இருந்த 1 ஏக்கர் நிலத்தில் 56 சென்ட் வரை மட்டுமே இடிக்கப்பட்ட நிலையில், மீதம் இருந்த 3 கிரவுண்ட் நிலம் விஜயகாந்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த மீதம் கிடைத்த இடத்தில்தான் தற்போதைய தேமுதிக தலைமை அலுவலகம் கட்டப்பட்டது. அதே இடத்தில் கல்யாண் மண்டபமும் இயங்குகிறது. 

பழம் நழுவி பாலில் விழவேயில்லை

2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் திமுகவுடன் கூட்டணி சேராத விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டு வைத்தார். தொடர்ந்து, 2014 மக்களவை தேர்தல், 2016 சட்டப்பேரவை தேர்தல் என கருணாநிதி இருக்கும் வரையிலும் விஜயகாந்த் வேறு வேறு கூட்டணிக்கு சென்றாலும் திமுக பக்கம் மட்டும் தலைவைத்து படுக்கவேயில்லை எனலாம். 2016இல் பழம் நழுவி பாலில் விழும் என விஜயகாந்த் திமுக உடன் கூட்டணியில் சேருவார் என கருணாநிதியின் எதிர்பார்ப்பு கடைசி வரை நிறைவேறவில்லை. 

அதற்கு முக்கிய காரணம், அவரது உயிரினும் மேலாக பார்த்த அந்த ஆண்டாள் அழகர் மண்டபத்தை இடித்ததுதான் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். இதுகுறித்த சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்தாலும், அவருக்கும் கருணாநிதிக்கும் இருந்த நட்புறவையும் யாராலும் மறுக்க முடியாது. அது ஒருபுறம் இருக்க, அவர் உயிரினும் மேலாக பார்த்த அந்த இடத்திலேயே அவரது உடலை நாளை (டிச. 29) அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து. 

மேலும் படிக்க | விஜயகாந்த் ராசி எண் இதுவா?.. விருத்தாச்சலம் தொகுதியை இதுக்கு தான் தேர்ந்தெடுத்தாரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News