சென்னை: தமிழக பாஜக-வின் (Tamil Nadu BJP) மாநில செயற்குழு மற்றும் பல்வேறு உறுப்பினர் பதவிகளுக்கு புதன்கிழமையன்று பல்வேறு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். அதில், சந்தனக் கடத்தல்காரன் வீரப்பனின் (Veerappan) மகள் வித்யா ராணி (Vidhya Rani) , மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ராமசந்திரனின் (MGR) குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில திரைப்பட பிரமுகர்களும் அடங்குவர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பாஜக-வில் சேர்ந்தார். அவர், கட்சியின் மாநில இளைஞர் பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள காட்டுப்பகுதிகளில் வீரப்பன் ஒரு பெரும் கடத்தல் மன்னனாக வாழ்ந்து வந்தார். ஒரு பயங்கரமான கடத்தல்காரராக இருந்த வீரப்பனை 2004 ல் மாநில காவல்துறையின் சிறப்பு பணிக்குழு சுட்டுக் கொன்றது நினைவிருக்கலாம். அவரது மகள் பாஜக-வில் சேர்ந்தபோது, அது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
தமிழகம் அடுத்த ஆண்டு தேர்தல்களை (Tamil Nadu Elections) சந்திக்கவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கட்சியை புதுப்பிக்க, கட்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இவ்வாண்டு மார்ச் மாதம், எல்.முருகன் (L.Murugan) பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார். அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நியமனங்கள் பார்க்கப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டில் பாஜக-வில் சேர்ந்த அதிமுக-வை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வளர்ப்பு மகள் கீதா, எம்.சி.சக்ரபாணியின் பேரன் அர்.பிரவீண், நடிகர் ராதாரவி ஆகியோர் கட்சியின் மாநில செயற்குழுவின் உறுப்பினர்களாக்கப்பட்டுள்ளனர். நடிகர் விஜயகுமார் மற்றும் இயக்குனர்கள் கங்கை அமரன் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோர் மாநில செயற்குழுவில் சிறப்பு அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக எல். முருகன் அறிவித்தார். இவ்வகையில் கட்சியில் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடட்தக்கது. இயக்குனர் கஸ்தூரி ராஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மறுமகன் தனுஷின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் தினா மற்றும் இயக்குனர் பேரராசு, கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் செயலாளர்களாகவும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மாநில ஓபிசி பிரிவின் புதிய துணைத் தலைவராகவும் உள்ளனர்.
இது தவிர, கட்சியின் மாநில செயற்குழுவிற்கான உறுபினர்களையும் திரு. எல்.முருகன் நியமித்தார். இதில் இளைஞர் பிரிவு, பெண்கள் பிரிவு மற்றும் மீனவர்கள், நெசவாளர்கள் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய 38 உறுப்பினர்கள் உள்ளனர்.