சென்னை: அத்தி வரதரை தரிசிக்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். அவரின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்
40 ஆண்டுகள் கழித்து தான் திரும்ப காட்சி அளிப்பார் என்பதால், நாளுக்கு நாள் அத்திவரதரை தரிசிக்க மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு அலைபோல மக்கள் திரண்டுள்ளதால் கூட்டம் அதிகமானது. அத்தி வரதரை தரிசிக்க வழக்கத்துக்கு மாறாக இரண்டு மடங்கு அதிக அளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்ப்பட்டு மயங்கி விழுந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
அத்தி வரதர் உற்சவத்தில் பக்தர்கள் உயிரிழந்தது குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய தமிழக முதல்வர் பழனிச்சாமி, அத்திவரதரை தரிசிக்க, பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 10 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 200 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1200 மீட்டர் தொலைவுக்கு தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட்டம் அதிகமாக கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.