வெங்காயத்தின் விலையை நினைத்து பார்த்தாலே கண்ணீர் வருகிறது: MKS

மத்திய, மாநில அரசுகளின் மேத்தனம் காரணமாக மக்களின் அடிவயிறு கலங்கி கிடக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!! 

Last Updated : Dec 9, 2019, 12:50 PM IST
வெங்காயத்தின் விலையை நினைத்து பார்த்தாலே கண்ணீர் வருகிறது: MKS title=

மத்திய, மாநில அரசுகளின் மேத்தனம் காரணமாக மக்களின் அடிவயிறு கலங்கி கிடக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!! 

சென்னை: வெங்காயத்தை உரிக்கும் போது தான் முன்பெல்லாம் கண்ணீர் வரும், ஆனால் இப்போது வெங்காயம் விற்கும் அநியாய விலையை நினைத்துப் பார்த்தாலே கண்ணீர் வருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பிலும், விலையிலும், விநியோகத்திலும் அலட்சியம் காட்டினால், ஆட்சியாளர்கள் மக்களிடம் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுப் போய் விடுவார்கள் எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; வெங்காயத்தை உரிக்கும்போதுதான் முன்பெல்லாம் கண்ணீர் வரும். இப்போது வெங்காயம் விற்கும் அநியாய விலையை நினைத்துப் பார்த்தாலே கண்ணீர் வருகிறது. தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோல் போல, வெங்காயமும் இன்று கிடுகிடு விலையை வேகமாக எட்டிப் பிடிக்கும் பொருள்களுள் ஒன்றாக ஆகிவிட்டது அல்லது ஆக்கப்பட்டு விட்டது. இன்றைய விலை நிலவரத்தில் தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோலுக்கு அடுத்து வெங்காயத்தையும் ஊடகங்கள் வெளியிடுகின்றன.

கடந்த நவம்பர் முதல் வாரம், ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது. நவம்பர் 2-வது வாரம் 10 ரூபாய் உயர்ந்து, கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டிசம்பர் 2-ஆம் தேதி ரூ.110-ஆக உயர்ந்தது. டிசம்பர் இரண்டாவது வாரம் ரூ.140-ஆக உயர்ந்தது. அதன்பிறகு நித்தமும் உயர்ந்து 200 ரூபாய் ஆகிவிட்டது! வெளிச்சந்தை விலைகளைச் சொல்லவே முடியாது. 230 ரூபாய் முதல் 250 வரை ஆகிவிட்டது. இந்த விலை உயர்வு குறித்து தமிழக அரசு சிறிதேனும் கவலை கொண்டதா? அதனைக் குறைப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? என வெளியில் தெரியவில்லை!

இந்தியா முழுவதும் வெங்காயம் அதிக விலைக்கு விற்றாலும், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் விலை கட்டுக்குள் இருக்கிறது. வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட, அந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனை ஏன் தமிழக அரசால் செய்ய முடியவில்லை?. வெங்காயத்தை அதிக விலை கொடுத்து சில்லறை வணிகர்களால் வாங்க முடியவில்லை, அதிக மழை காரணமாக எடுத்துவர முடியவில்லை, இடைத்தரகர்கள் பதுக்குவது - என்பது போன்ற பிரச்னைகளை, ஒரு அரசாங்கம் மனது வைத்தால், உரிய நடவடிக்கை எடுத்துத் தீர்க்க முடியாதா?

'நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவது இல்லை' என்று மத்திய அமைச்சர் ஒருவரே நாடாளுமன்றத்தில் சொல்கிறார் என்றால், வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை சாப்பிடுவதைத் தவறு என்று சொல்கிறாரா? முன்னேறிய வகுப்பு எண்ணத்தோடு அப்படிச் சொல்கிறாரா? பூண்டு விலையும் 40 சதவிகிதம் அதிகரித்துவிட்டதாக வணிகர்கள் சொல்கிறார்கள். மக்களின் வயிற்றில் கை வைக்கும் இந்த விலைவாசி உயர்வு குறித்து மத்திய - மாநில அரசுகளுக்குச் சிறிதும் அக்கறை இல்லை என்பது, அவர்களின் நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது. விவசாய நாடு என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அன்றாட உணவுப் பொருளான வெங்காயம் குறித்த முறையான திட்டமிடுதலே இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை.

அடிப்படை நிலையில் திட்டமிடல், சேமித்து வைக்க நல்ல வசதிகள், உணவுப் பதப்படுத்தலுக்கான அறிவியல் முறைகள் மூலம் இந்தப் பிரச்சினையைச் சமாளித்து உதவலாம். உணவுப்பொருளின் விலை லேசாக உயரும்போதே, அது தொடர்பான ஆலோசனையை ஆட்சியாளர்கள் செய்தால்தான், விலை அதிகமாக உயராமல் கட்டுப்படுத்த முடியும். இரண்டுமாத காலமாக தொடமுடியாத உயரத்துக்கு விலை உயர்ந்த பிறகு, ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வோம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். இந்த விலை உயர்வால் மக்கள் படும் அவதியை இந்த ஆட்சியாளர்கள் இப்போதுதான் உணர்கிறார்களா?

'வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் போகிறோம். ஜனவரி 20-ஆம் தேதிக்குப் பிறகு தாராளமாகக் கிடைக்கும்' என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் தன்வே ராவ்சாகிப் தாதாராவ் சொல்லி இருக்கிறார். அமைச்சர் சொல்வதே ஜனவரி 20 என்றால், நிலைமை மொத்தமாகச் சீரடைய இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம். அத்தியாவசியப் பொருட்களின் இருப்பிலும், விலையிலும், விநியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள் என்று எச்சரிக்கை செய்வது எனது கடமை ஆகும் என்று தெரிவித்துள்ளார். 

 

Trending News