Tamil Nadu CM MK Stalin On Adani Case Issue: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டு நாள் கூட்டத்தொடர் நேற்று (டிச. 9) தொடங்கியது. அந்த வகையில், இன்றைய இரண்டாம் நாளில் கேள்வி - பதில் அமர்வு நடைபெற்றது. அதில் பாமக சட்டப்பேரவைக் குழு தலைவர் ஜி.கே. மணி, அமெரிக்காவில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிகையில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என்றும் அதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு சட்டப்பேரவையிலேயே பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,"பாமக சார்பில் கேள்வி எழுப்பிய ஜி.கே. மணி மட்டுமின்றி, பொதுவெளியில் அக்கட்சியின் தலைவர்களும் இந்த விவகாரத்தில் பல்வேறு கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர். அதில் ஒன்று, அதானியை முதலமைச்சர் சந்தித்தார் என்றும் அதானிக்கும் முதலமைச்சருக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் பொதுவெளியில் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அதை ஜி.கே. மணி இங்கும் பதிவு செய்வார் என நினைத்தேன், ஆனால் இங்கு அவர் சொல்லவில்லை.
பாமக, பாஜக ஆதரிக்குமா...?
அவர்களுக்கும் தற்போது உண்மை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன், அதனால்தான் இங்கு அதனை பேசவில்லை என தோன்றுகிறது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குறித்து பொதுவெளியில் தவறான தகவல்கள் வருகின்றனர். ஏற்கெனவே பலமுறை அந்த விவகாரம் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துவிட்டார். இருப்பினும் அதானி நிறுவனத்துடனான முதலீடுகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
மேலும் படிக்க | டங்ஸ்டன் சுரங்கம் வந்தால்... முதலமைச்சராக இருக்க மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின்
அதானி மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டக்குழு விசாரணை நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் எனவும் குரல் எழுப்புகின்றனர்.
அதானியை நான் சந்திக்கவே இல்லை
அந்த வகையில், திமுக மீது தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அதானி மீதான கூட்டுக்குழு விசாரணை கோரிக்கையை ஆதரிப்பீர்களா? இதுகுறித்து விளக்கி பேச தயாராக இருக்கிறீர்களா?" என கேள்வி எழுப்பினார். மேலும் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. என்னுடன் அதானி சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை. இதை விட விளக்கம் தேவையா" என்று கூறி அமர்ந்தார்.
சாத்தனூர் அணை விவகாரம்
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பாமகவின் ஜி.கே. மணி, பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"பாமக சார்பில் சட்டப்பேரவையில் அதானி விவாகாரத்தை எழுப்பினோம். அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்பதிவில் தமிழ்நாடு அரசின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது உண்மையா அல்லது உண்மைக்கு புறம்பான செய்தியா என முதலமைச்சரை விளக்கமளிக்க வலியுறுத்தினோம்.
சாத்தனூர் அணை அறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணம் அநீதியாகும்.
மேலும் படிக்க | டங்ஸ்டன் சுரங்க விவகாரம் : திமுகவை கடுமையாக சாடிய இபிஎஸ்!
ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும்
கடந்த ஆண்டு சென்னை, தூத்துக்குடி, நெல்லை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும் ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஏன் இந்த பாகுபாடு...? வட மாவட்டங்களிலும் குடும்ப அட்டைகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
அதானி விவகாரத்தில் அதானியை சந்திக்கவில்லை என்ற முதலமைச்சரின் பதில் திருப்தியளிக்கிறது. ஆனால் அமெரிக்க நீதிமன்ற வழக்கில் தமிழ்நாடு அரசு பெயர் இருப்பது குறித்த விளக்கத்தில் திருப்தி இல்லை. முறைகேடுகளுக்கு எதிராக பாமக எப்போதும் குரல் கொடுக்கும்" என்றார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் சாத்தனூர் அணை திறப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விளக்கத்தில், 5 முறை உரிய எச்சரிக்கை அளித்த பின்னரே சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாக கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | எங்கள் பக்தர் செல்லூர் ராஜூ... அமைச்சர் கேகர் பாபு சுவாரஸ்ய பேச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ