தென் தமிழகப் பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது!
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. நேற்று காலை முதல் கடல் சீற்றம் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்..!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை, மானாமதுரையில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென் தமிழக பகுதிகளில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வலுவான காற்று வீசுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.