தஞ்சாவூர் பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது.
உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர் கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. கடந்த மாதம் 27-ஆம் தேதி யஜமான அனுக்ஞை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து பூஜைகள் நடந்து வருகின்றன. முதல்கால யாகசாலை பூஜை கடந்த 1-ஆம் தேதி மாலையில் தொடங்கியது.
இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ஆம் ஆண்டு கட்டினார். இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. கடைசியாக 1997-ஆம் ஆண்டு பெரியகோவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.
இந்த கோவிலில் உள்ள தெய்வங்களின் சக்தியை வேதாகம முறைப்படி பெருவுடையார் சன்னதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். அதனை பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். திருப்பணிகள் முடிந்து கடந்த மாதம் 27-ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. அன்று 39½ அடி உயரத்தில் செய்யப்பட்ட புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் பெரியகோவிலில் உள்ள 216 அடி விமான கோபுரம் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளின் கோபுர கலசங்களும் கழற்றப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்காக தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் பணி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக 21 இடங்களில் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக தினத்தன்று 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி கும்பாபிஷேகத்தை காணும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சை பெரியகோவிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்க உள்ள நிலையில் கும்பாபிஷேக விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.