தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு தாக்கல் செய்த அறிக்கையும், அங்கு இருக்கும் சூழலும் எதிர்மறையாக உள்ளதாக தமிழ்நாடு அரசு வாதிட்டிருக்கிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திடம் எடுத்துரைத்திருக்கிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பை கடுமையாக எதிர்த்து வாதிட்டார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு, அந்நிறுவனம் வாதிட்டுள்ளது.
அனைத்து வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
Supreme Court sets aside National Green Tribunal's order of December 15, 2018 which had allowed reopening of Vedanta Group owned Sterlite plant in Tuticorin. SC has asked Tamil Nadu govt and Vedanta to approach Madras High Court on the issue. pic.twitter.com/gHFBjizTYj
— ANI (@ANI) February 18, 2019
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவிருத்தியுள்ளது. மேலும், ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதை எதிர்த்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது!