தமிழகத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணை நிரம்பினால் பாதுகாப்பு கருதி செயற்பொறியாளர்களே நீரை திறந்து விடலாம் என்று பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வரும் 7-ஆம் தேதி முதல் அதிகனமழை முதல் மிக அதிகனமழை இருக்கும் என இந்தய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 25 செமி மேல் மழை பெய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 7-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில் 15 பெரிய அணைகளில் கன மழை பெய்து நீர்நிலைகளில் கரை உடைப்பு ஏதும் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 5 லட்சம் மணல் மூட்டைகளை பொதுப்பணி துறை தயார் நிலையில் வைத்துள்ளது.
மேலும் செயற் பொறியாளர்கள் தலைமையில் அணைகளின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணிக்குமாறும், நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்த தகவல்களை தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதேப்போல் அணை நிரம்பினால் செயற்பொறியாளார்கள் நீரை பாதுகாப்பு கருதி திறந்து விடலாம் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. நீர் வரத்து, இருப்பு, வெளியேற்றம் குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தெரிவிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் பேரிடர் மீட்பு படையினை அழைக்கவும் பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது!