தமிழகத்தின் முக்கிய வழித்தடங்களில் தொடர்வண்டி சேவையை நிறுத்தக்கூடாது!

வருவாய் இல்லாததைக் காரணம் காட்டி தொடர்வண்டி சேவைகளை நிறுத்தும் திட்டத்தை இந்திய தொடர்வண்டி வாரியம் கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

Last Updated : Jun 22, 2020, 06:30 PM IST
தமிழகத்தின் முக்கிய வழித்தடங்களில் தொடர்வண்டி சேவையை நிறுத்தக்கூடாது! title=

வருவாய் இல்லாததைக் காரணம் காட்டி தொடர்வண்டி சேவைகளை நிறுத்தும் திட்டத்தை இந்திய தொடர்வண்டி வாரியம் கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் போதிய அளவில் வருவாய் ஈட்ட முடியாத வழித்தடங்களில் இயக்கப்படும் தொடர்வண்டிகளின் சேவைகளை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி தொடர்வண்டித் துறைகளுக்கு இந்திய தொடர்வண்டி வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தமிழ்நாட்டின் தொடர்வண்டி வரைபடத்தையே சிதைக்கும் தன்மை கொண்டதாகும்; இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தொடர்வண்டித்துறை செலவுகளைக் குறைப்பதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களை தொடர்வண்டித் துறை பொது மேலாளர்களுக்கு இந்திய தொடர்வண்டி வாரியத்தின் நிதி ஆணையர் மஞ்சுளா ரங்கராஜன் அனுப்பியுள்ளார். அதில் முக்கியமாக இடம்பெற்றுள்ள பரிந்துரை என்னவென்றால், ‘‘எந்தெந்த கிளை வழித்தடங்களில் இயக்கப்படும் தொடர்வண்டிகள் வருவாய் ஈட்டவில்லையோ, அந்த தொடர்வண்டிகள் அனைத்தின் சேவைகளையும் எந்த அளவுக்கு நிறுத்த முடியுமோ, அந்த அளவுக்கு நிறுத்த வேண்டும்’’ என்பது தான். அதாவது வருமானம் இல்லாத வழித்தடங்கள் அனைத்தையும் மூடி விட்டு, அதிக லாபம் ஈட்டும் வழித்தடங்களில் மட்டும்  தொடர்வண்டிகளை இயக்கலாம் என்பது தான் இதன் பொருளாகும்.

அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் சென்னை - மதுரை, சென்னை - நெல்லை, சென்னை - தூத்துக்குடி, சென்னை -நாகர்கோவில், சென்னை - பெங்களூரு உள்ளிட்ட சில வழித்தடங்களில் இயக்கப்படும்  தொடர்வண்டிகள் மட்டும் தான் லாபத்தில் இயங்குகின்றன. மற்ற வழித்தடங்களில் இயக்கப்படும் தொடர்வண்டிகளின் வருமானம் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது. அதைக் காரணம் காட்டி, அந்த தொடர்வண்டி சேவைகளை ரத்து செய்ய வேண்டும் என்று நினைத்தால் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை ஏராளமான கிளை வழித்தடங்களில் சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை உருவாகும்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து மயிலாடுதுறை, மன்னார்குடி, மானாமதுரை, இராமேஸ்வரம்,  சிதம்பரம், கடலூர், கும்பகோணம், போடி நாயக்கனூர், உசிலம்பட்டி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களுக்கு தொடர்வண்டி சேவைகள் இயக்கப்படுகின்றன. வருமானம் கிடைக்காததைக் காரணம் காட்டி இந்த சேவைகள் நிறுத்தப்பட்டால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

READ | COVID-19 சிக்கிசைக்கான மருந்தை அறிமுகப்படுத்திய சிப்லா - முழு விவரம்! 

ஒரு நாட்டில் அனைத்து வழித்தடங்களிலும் தொடர்வண்டி சேவையை லாபகரமாக இயக்கிவிட முடியாது. அது அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட சாத்தியமல்ல. தொடர்வண்டிப் போக்குவரத்தை மக்களுக்கு வழங்கப்படும் சேவையாக பார்க்க வேண்டுமே தவிர,  வருமானம் ஈட்டும் வழியாக பார்க்கக்கூடாது. கிளை வழித்தடங்களில் தொடர்வண்டி சேவையை நிறுத்தி விட்டு, முதன்மை வழித்தடங்களில் மட்டுமே தொடர்வண்டிகளை இயக்குவது சாத்தியமில்லை.  

முதன்மை வழித்தடங்களில் இயக்கப்படும் தொடர்வண்டிகளில் பயணிப்பவர்கள் அனைவருமே அந்த வழித்தடங்களில் மட்டும் வாழும் மக்கள் அல்ல. உதாரணமாக தமிழகத்தை எடுத்துக் கொண்டால்,  சென்னையிலிருந்து பயணத்தைத்  தொடங்குபவர்கள் அனைவருமே சென்னையிலிருந்து 50 கி.மீ சுற்றுப்பகுதியில் வசிப்பவர்கள் ஆவர். அவர்கள் சென்னைக்கு வந்து பயணத்தை தொடங்க வேண்டும்; பயணத்தை முடித்துக் கொண்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் கிளை வழித்தடங்களில் தொடர்வண்டிகளை இயக்கியாக வேண்டும். அவ்வாறு இயக்காவிட்டால், கிளை வழித்தடங்களில் வாழ்பவர்கள் மாற்றுப் போக்குவரத்த்தை தேடிக் கொள்வர். அத்தகைய நிலைமை ஏற்படும் போது முதன்மை வழித்தடங்களில் பயணிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.

கிளை வழித்தடங்களில் தொடர்வண்டி சேவையை ரத்து செய்யும் தொடர்வண்டி வாரியத்தின் பரிந்துரை செயல்படுத்தப்பட்டால், அதன்பின் வட மாவட்டங்களின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னையிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் வழியாக கிழக்கு கடற்கரை தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டம் ஆகியவையும் கைவிடப்படக் கூடும். அது வட மாவட்டங்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

எனவே, வருவாய் இல்லாததைக் காரணம் காட்டி தொடர்வண்டி சேவைகளை நிறுத்தும் திட்டத்தை இந்திய தொடர்வண்டி வாரியம் கைவிட வேண்டும். அதற்கு பதிலாக தொடர்வண்டி கட்டமைப்புகளை அதிகரித்து, அதிக அளவில் தொடர்வண்டிகளை இயக்கி, அதை முதன்மைப் போக்குவரத்து முறையாக மாற்றவும், அதன்மூலம் வருவாயை அதிகரிக்கச் செய்யவும் தொடர்வண்டித்துறை முன்வர வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Trending News