சூடு பிடிக்கும் பஞ்சமி நிலம் விவகாரம்: ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் சவால்..!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார். நிரூபிக்கத் தவறினால், ராமதாசும், அவரது மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என கேள்வி எழுப்பி ஸ்டாலின்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 18, 2019, 02:28 PM IST
சூடு பிடிக்கும் பஞ்சமி நிலம் விவகாரம்: ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் சவால்..! title=

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் பரபரப்பு நிலவிவரும் நிலையில், தற்போது பாமக மற்றும் திமுக இடையே முரசொலி நிலம் குறித்து காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பஞ்சமி நிலத்தை மையமாக வைத்து வெளியான "அசுரன்" (Asuran) படம் மிகப்பெரிய வெற்றி மற்றும் பாராட்டை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் அந்த படத்தை குறித்து பேசப்பட்டது. இதனையறிந்த திமுக தலைவர் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே அசுரன் படத்தை பார்வையிட்டார். அதன் பின்னர் "அசுரன்" படத்தைக் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், 

"#Asuran -படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் (VetriMaaran), அந்த படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கும் நடிகர் தனுசுக்கும் (Dhanush) பாராட்டுகள்" எனப் பதிவிட்டிருந்தார்.

 

இந்த பதிவுக்கு எதிர்வினையாற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம் என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதை ஆஹா... அற்புதம்.. எனப் புகழ்ந்த ராமதாஸ், அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஸ்டாலின் ஒப்படைப்பார் என்று நம்புவோம்" எனப் பதிவிட்டிருந்தார்.

 

ராமதாஸ் ட்விட்டர் பதிவுக்கு பதிலடி தரும் வகையில், இன்று தனது சமூக வலைதளத்தில் பதில் அளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருகிறார். முரசொலி இருக்கும் இடம் பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா மனை என்று விளக்கம் அளித்துள்ள ஸ்டாலின், அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று கூறியுள்ளார். நிரூபிக்கத் தவறினால், ராமதாசும், அவரது மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

 

Trending News