மகாவீரர் பிறந்த நாளில் மனிதகுலத்துக்கு எதிரான கொடுமைகள் ஒழியட்டும் என்று மருத்துவர் இராமதாசு அவர்களின் மகாவீரர் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.
எறும்பு உள்ளிட்ட எந்த உயிருக்கும் தீங்கு இழைக்கக்கூடாது என்ற உன்னத எண்ணம் கொண்ட வர்த்தமானர் என்றழைக்கப்பட்ட மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாடும் சமண மத சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதைய பிகார் மாநிலத்தின் சத்திரியகுண்டா என்ற இடத்தில் அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர் ஆடம்பர வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் தமது முப்பதாவது வயதில் அரச சுகங்களைக் களைந்து பற்றற்ற வாழ்க்கையை தொடங்கினார். இளவரசராகப் பிறந்து ஆன்மிகத் தேடலில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவர், வன்முறை தவிர்த்தல், பற்று அற்று இருத்தல், வாய்மை, கல்லாமை, பாலுறவு தவிர்த்தல் ஆகிய உயர்ந்த குணங்களை போதித்தது மட்டுமின்றி தமது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர். சமூகக் கேடான மதுவின் கொடுமைகளுக்கு எதிராகவும் போதனைகளை வழங்கியவர்.
மனித குலம் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் துன்பமின்றி வாழ வேண்டும் என்று விரும்பிய மகாவீரரின் பிறந்த நாள் உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படும் நிலையில், அந்த நாடுகள் அனைத்தையும் இப்போது மனித குலத்திற்கு எதிரான கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கிறது. அனைத்து உயிர்களும் துன்பமின்றி வாழ வேண்டும் என்ற மகாவீரரின் உன்னத எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் கொரோனா உள்ளிட்ட கொடுமைகள் அனைத்தும் உடனே ஒழியட்டும்.
அமைதியும் பொறுமையுமே மனிதனை மேம்படுத்தும் என்று போதித்த மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில், அவரின் போதனைகளை பின்பற்றி வாழவும், அவர் விரும்பியவாறு மது என்ற அரக்கனை ஒழிக்கவும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று கூறி, மீண்டும் ஒருமுறை எனது மகாவீரர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.