ஓபிஎஸ்-க்கு பெருகி வரும் ஆதரவு: மேலும் 6 எம்.பி ஆதரவு!!

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

Last Updated : Feb 13, 2017, 11:08 AM IST
ஓபிஎஸ்-க்கு பெருகி வரும் ஆதரவு: மேலும் 6 எம்.பி ஆதரவு!! title=

சென்னை: ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

அதிமுக-வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. சட்டசபை அதிமுக கட்சியின் தலைவராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டதால் அவருக்கு வழிவிடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதமும் கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்டது.

ஆனால், முதல்-அமைச்சராக பதவி ஏற்குமாறு கவர்னரிடம் இருந்து சசிகலாவுக்கு உடனடியாக அழைப்பு வரவில்லை.

இதற்கிடையே, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகவும், அவமானம் படுத்தியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி பேட்டி அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேட்டிக்கு பிறகு ஓ. பண்ணீர்செல்வத்தை அதிமுக-வின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார்.

இதனால் அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. ஆட்சியை பிடிப்பதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. 

இருவரும் ஆதரவாளர்களை திரட்டும் நடவடிக்கையிலும், ஆட்சி அமைக்கும் முயற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக இருவரும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஆனால், ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து கவர்னர் இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை. 

சசிகலா மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஓ. பன்னீர்செல்வத்தின் கரத்தை பலப்படுத்தி வருகின்றனர். சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு ஏராளமானோர் வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அவைத்தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பொன்னையன் உள்பட மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து ஓ. பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்தனர்.

அதிமுக-வை சேர்ந்த டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார், சுந்தரம், சத்யபாமா, வனரோஜா ஆகிய 5 எம்.பி.க்களும், மாணிக்கம் , ஆறுக்குட்டி, மனோரஞ்சிதம், எஸ்.பி.சண்முகநாதன், மனோகரன், க.பாண்டியராஜன் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்களும்  ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை நேற்று அவரது இல்லத்தில் அதிமுக-வை சேர்ந்த ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, செங்குட்டுவன், மருதைராஜா, பார்த் திபன், எம்.ராஜேந்திரன், லட்சுமணன் ஆகிய மேலும் 6 எம்.பி.க்கள் சந்தித்து, தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

இவர்களையும் சேர்த்து ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.பி.க் களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து இருக்கிறது.

எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மாளின் சகோதரி மகன் திலிப் என்கிற ராமச்சந்திரன், நடிகர்கள் ராமராஜன், தியாகு, மனோபாலா, விக்னேஷ், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மனைவி கஸ்தூரி, தேனி மாவட்ட போலீஸ்காரர் வேல்முருகன், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் உள்ளிட்டோரும் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.

Trending News