தமிழகத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கூடாது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ம.தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அதுக்குறித்து மதிமுக சார்பில் வைக்கப்பட்ட கருத்துகள் பின்வருமாறு:-
07.01.2019 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூடி, பொருளாதாரத்தில் நலிவு அடைந்த உயர்சாதியினருக்கு, பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்ட, 124ஆவது திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. அதற்கு மறுநாளே, 08.01.2019 அன்று, அந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. உடனே குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று, அனைத்து நடைமுறைகளையும் மின்னல் வேகத்தில் முடித்து, நடைமுறைக்குக் கொண்டு வந்து விட்டது.
விடுதலை பெற்ற இந்தியாவில், இத்தகைய வேகத்தில் வேறு எந்தச் சட்டத்திருத்தமும் நிறைவேற்றப்பட்டது இல்லை. மாநில அரசுகள் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பும் அளிக்கவில்லை.
இந்த மசோதாவின்படி......,
முன்னேறிய வகுப்பினருள் இட ஒதுக்கீடு கோருவோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 8 இலட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்; 5 ஏக்கருக்குக் குறைவாக விவசாய நிலம் வைத்து இருக்க வேண்டும்; நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் வசிப்பவராக இருந்தால் ஆயிரம் சதுர அடி நிலம் வைத்து இருக்கலாம். இவைகள்தான் உயர்சாதி ஏழைகள், 10 விழுக்காடு இடஒதுக்கீடு பெற அடிப்படைத் தகுதிகள் என்று மத்திய பா.ஜ.க. அரசு வரையறை செய்துள்ளது.
உண்மையில், இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருடன் ஒப்பிடுகையில், பாஜக அரசு வகுத்துள்ள இந்த அளவுகோல், ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதற்கு ஒப்பாகும்.
ஏழை மக்களுக்கு உதவுகின்றோம் என்ற முகமூடியில், சமூக நீதிக்கொள்கையைக் குழித்தோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயலைக் கண்டித்து, மக்கள் தலைவர் வைகோ அவர்கள் 09.01.2019 அன்று கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
மறுமலர்ச்சி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான சங்கொலியும் இதனைக் கண்டித்தும், இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் தலையங்கம் தீட்டியது.
நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களும், அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன் ஆகியோரும் இதனைக் கண்டித்தும், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உரை ஆற்றினார்கள்.
இந்திய அரசு அமைப்புச் சட்டம், சமூக நீதிக்கொள்கைக்காக முதன்முதலாகத் திருத்தப்பட்டது. அப்போது, பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி அவர்கள், ‘இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
ஆனால் பிரதமர் நேரு அவர்களும், சட்ட அமைச்சர் அம்பேத்கர் அவர்களும் அதனை ஏற்கவில்லை. பொருளாதார அளவுகோலைப் புகுத்தும் முயற்சி, நாடாளுமன்ற வாக்கெடுப்பிலும் தோற்கடிக்கப்பட்டது.
அதுபோலவே, 2010 ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் செல்லாது என குஜராத் உயர்நீதிமன்றம் 04.08.2016 அன்று தீர்ப்பு அளித்தது.
இதற்கு முன்பாக, 1975 இல் கேரள தேவசம் போர்டு , 2015 இல் உத்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள், 2016 இல் அரியாணா மாநில அரசு, பொருளாதார அடிப்படையில் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு செய்து கொண்டு வந்த ஆணைகள், அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்துள்ளன.
‘சமூகநீதி காக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது, வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. வறுமையை ஒழிக்க தனியே பல வழிகள் காண வேண்டுமே தவிர, அதற்காக இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது’ என்று, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஓ.சின்னப்ப ரெட்டி அவர்கள் தனது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் முதலான அனைத்துக் கட்சிகளும் பிற்படுத்தப்பட்ட அமைப்புகளும், அன்னை தெரசா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி, கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ச.சி.ராஜகோபாலன் ஆகியோரும் சமூக நீதிக்கு எதிரான இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநில பொருளாதார அறிஞரும், பாரத ரத்னா விருது பெற்ற சிந்தனையாளருமான அமர்த்தியா சென் அவர்கள், “ஒட்டுமொத்தமான இடஒதுக்கீட்டு உரிமைகளை நீர்த்துப் போகச் செய்யவும், நீக்கவும்தான் இந்தச் சட்டம் பயன்படும்” என்று எச்சரித்துள்ளார்.தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி அவர்களும் இந்த முயற்சிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளார்கள்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களைக் கைதூக்கி உயர்த்தி விடுவதற்காகச் செய்யப்படும் அரசு நடவடிக்கைகள் அனைத்தையும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் வரவேற்று ஆதரிக்கின்றது.
ஆனால், அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டைப் பாதிக்கின்ற வகையிலும் உள்ள, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கின்றது.
தமிழகத்தில், முன்னேறிய வகுப்பினருக்கு, பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இடங்களை ஒதுக்கக் கூடாது; இந்தச் சட்டத்தில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு கோர வேண்டும்; அனைத்து இந்திய அளவிலும் இம்முயற்சியைக் கைவிட வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.கழகம் கேட்டுக் கொள்கின்றது.
இவ்வாறு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.