நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவடைந்தது. அதில் 17 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதேபோல ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குபதிவும் நடைபெற்றது. 17 ஆவது மக்களவைக்கான தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனையடுத்து இரண்டாவது கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் மொத்தம் 97 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. அன்று தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதற்க்கான தேர்தல் பிரச்சாரம் நாளை (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. நாளை கடைசி நாள் என்பதால் பல அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நாளை மாலை 6 மணி முதல் வரும் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை எந்த அரசியல் கட்சியும் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தக்கூடாது. மேலும் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.